பிரதமர் மோடி ஆட்சியில் 12 கோடி வேலைகள் பறிபோய்விட்டன; சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு
பிரதமர் மோடி ஆட்சியில் 12 கோடி வேலைகள் பறிபோய்விட்டன என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளார்.
பெங்களூரு:
மிக முக்கியமானது
வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின் நினைவு நாள் நிகழ்ச்சி பெங்களூருவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு, பேசியதாவது:-
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் மிக முக்கியமானது. வெள்ளையர்களை வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பாம்பே காங்கிரஸ் மாநாட்டில் இதுகுறித்து தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அன்றைய ஆங்கிலேயர்கள் அரசு அனைத்து தலைவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது.
வெள்ளையனே வெளியேறு
சிறையில் அடைக்கப்பட்ட காந்தி உள்ளிட்ட தலைவர்கள், தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டதால் இந்த போராட்டம் நிற்கக்கூடாது, திட்டமிட்டதை விட போராட்டம் தீவிரமாக நடைபெற வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர். நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்ததில் வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டம் மிக முக்கிய காரணம் ஆகும்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் மோடி, தேர்தலில் காங்கிரசுக்கு 60 ஆண்டுகள் ஆட்சியை கொடுத்தீர்கள், பா.ஜனதாவுக்கு 60 மாதங்கள் தாருங்கள், நாட்டை மாற்றி காட்டுகிறேன் என்று கூறினார். அதன்படி நாட்டில் மாற்றம் நிகழ்ந்திருப்பது உண்மை தான். ஆனால் அவர் கூறிய மாற்றத்திற்கு எதிரான மாற்றம் தான் ஏற்பட்டுள்ளது.
மோடியின் பங்களிப்பு
மோடியின் 7 ஆண்டு கால ஆட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், முன்னேற்றம் அடைந்திருக்க வேண்டும். ஆனால் மேல் நிலையில் இருந்த மக்களில் 23 சதவீத பேர் வறுமை கோட்டிற்கு கீழே சென்றுள்ளனர். நாட்டில் 12 கோடி வேலைகள் பறிபோய்விட்டன. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 7.7 சதவீதமாக குறைந்துவிட்டது.
இது தான் நாட்டிற்கு மோடியின் பங்களிப்பு. மோடியின் மொத்த சாதனை பொய் பேசுவது தான். சுதந்திர இந்தியாவில் பிரதமர்களில் மோடி அளவுக்கு பொய் பேசியவர்கள் யாருமில்லை. சுதந்திர போராட்டத்தில் பா.ஜனதா தலைவர்கள் யாரும் கலந்து கொண்டது இல்லை. தியாகத்தின் மறுபெயர் காங்கிரஸ். காங்கிரசை விட்டு விலகி சென்றவர்கள், கொள்கையில் பிடிப்பு இல்லாதவர்கள்.
சமத்துவத்திற்கு எதிரானவர்கள்
பா.ஜனதாவினர் சமத்துவத்திற்கு எதிரானவர்கள். கிழக்கிந்திய கம்பெனிகள் நாட்டை கொள்ளையடித்தன. அப்போது நாட்டின் வளர்ச்சி 2 சதவீதமாக இருந்தது. காங்கிரஸ் ஆட்சியை விட்டு சென்றபோது, பொருளாதார வளர்ச்சி 10 சதவீதமாக இருந்தது.
நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ஜனதாவை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்க வேண்டும். நாட்டில் பா.ஜனதாவுக்கு எதிராக ஓரணியில் திரண்டிருப்பது நல்ல விஷயம்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story