விவசாயி வீட்டில் 19 பவுன் நகைகள் திருட்டு
வேப்பந்தட்டை அருகே விவசாயி வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 19 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
வேப்பந்தட்டை:
நகைகள் திருட்டு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன்(வயது 55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குடும்பத்தினருடன் தூங்கினார். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்து உள்ளே இருந்த 19 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.
நேற்று காலை கணேசன் மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது, பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பீரோவில் பார்த்தபோது நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
மற்றொரு வீட்டில்...
இதேபோல் அதே ஊரைச் சேர்ந்த தங்கராசுவின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 40 கிராம் வெள்ளிப்பொருட்களை திருடிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக கணேசன் மற்றும் தங்கராஜ் ஆகியோர் கை.களத்தூர் போலீசில் தனித்தனியே புகார் கொடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகைகள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவங்கள் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story