பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி


பெரம்பலூர் மாவட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி
x
தினத்தந்தி 10 Aug 2021 2:08 AM IST (Updated: 10 Aug 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கு பின்பு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்:

தடை
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் கடந்த 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதித்து கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒரு வாரமாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படாமல், கோவிலில் ஆகம விதிகளின் படி பூஜைகள் மட்டும் நடைபெற்றன.
இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சுவாமியை வழிபட்டு சென்றனர். அந்த தடை உத்தரவு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததால், ஒரு வாரத்திற்கு பின்னர் நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பக்தர்கள் தரிசனம்
இதைத்தொடர்ந்து பக்தர்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் வாரந்தோறும் திங்கள், வெள்ளிக்கிழமை மற்றும் பவுணர்மி, அமாவாசை, விசேஷ நாட்களில் நடை திறப்பது வழக்கம். தற்போது ஆடி மாதம் என்பதால் பக்தர்கள் அதிகம் வருவதால் அந்த கோவிலில் திங்கட்கிழமையன்று பக்தர்களின் தரிசனத்துக்கு தடை விதித்து ஏற்கனவே கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
இதனால் நேற்றும் அந்த கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால் ஆகம விதிகளின்படி கோவிலில் பூஜைகள் மட்டும் நடைபெற்றன. இதனால் பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று அம்மனை வணங்கி சென்றதை காணமுடிந்தது. தமிழக அரசு நீட்டிக்கப்பட்ட ஊரடங்கில் வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டதால், அன்றைய நாட்களில் பெரம்பலூர் மாவட்டத்திலும் கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ளிட்டவை மூடப்படவுள்ளது.

Next Story