எங்களை தொட்டால் திருப்பி அடிப்போம்; மந்திரி ஈசுவரப்பா பேச்சால் சர்ச்சை
பா.ஜனதா அமைதியாக இருந்த காலங்கள் பொய் விட்டது என்றும், எங்களை தொட்டால் திருப்பி அடிப்போம் என்றும் மந்திரி ஈசுவரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சிவமொக்கா:
திருப்பி அடிப்போம்
சிவமொக்கா டவுனில் நேற்று முன்தினம் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு மந்திரியும், மாநில கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரியுரமான ஈசுவரப்பா கலந்துகொண்டார். அந்த கூட்டத்தில் ஈசுவரப்பா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, அந்த கூட்டத்தில் ஈசுவரப்பா பேசியதாவது:-
எதிராளிகள் நம்மை (பா.ஜனதா) அடிக்கும்போது அமைதியாக இருந்த காலங்கள் பொய்விட்டன. நம்மை தாக்கும் எதிராளிகளை நாம் திருப்பி அடிக்க வேண்டும். நம் மக்கள் கொலை செய்யப்படும்போது நாம் அமைதியாக இருக்க வேண்டாம். பா.ஜனதா தற்போது வலிமை பெற்றுள்ளது.
நாம் மற்ற விஷயங்களில் தலையிடக்கூடாது. நம் விஷயத்தில் யாராவது தலையிட்டால் சும்மா இருக்கக்கூடாது. பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது சும்மா இருக்க வேண்டுமா?. மாடுகள் கொல்லப்படும் போது சும்மா இருக்க வேண்டுமா?. நம் இளைஞர்கள் தாக்கப்படும்போது அமைதியாக இருக்க வேண்டுமா?. கடந்த காலங்களில் நமக்கு வலிமை இல்லை. தற்போது கிராம பஞ்சாயத்து முதல் பிரதமர் வரை பா.ஜனதா தான் உள்ளது. நம்மை தொட்டால் நாம் அமைதியாக இருக்க வேண்டுமா?.
இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கற்பனைக்கு எட்டாதது
இதற்கு பதில் அளித்து நேற்று ஈசுவரப்பா தெரிவித்துள்ளதாவது:-
நான் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அரசியல்ரீதியாக எதிர்க்கட்சிகள் தாக்கும்போது நாம் அமைதியாக இருக்கக்கூடாது. முன்பு அமைதியாக இருந்தோம். தற்போது வலிமை பெற்றுள்ளோம். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கூறினேன்.
முன்பு பா.ஜனதாவுக்கு பலம் இல்லை. இன்று லட்சக்கணக்கான மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவாக உள்ளனர். இந்துத்துவாவை கொண்டாட கூடும் மக்களின் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாதது.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் கண்டனம்
ஈசுவரப்பாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. வன்முறையை தூண்டும் வகையில் பேசிய ஈசுவரப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து சிவமொக்காவில் உள்துறை மந்திரி அரகா ஞானேந்திராவிடம் கேட்கப்பட்டபோது, ஈசுவரப்பா மூத்த தலைவர். அவரிடம் நான் பேசுவேன் என்றார்.
Related Tags :
Next Story