புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: சேலத்தில் மாலையில் கடைகள் அடைப்பு


புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது: சேலத்தில் மாலையில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 10 Aug 2021 3:56 AM IST (Updated: 10 Aug 2021 3:56 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சேலத்தில் நேற்று மாலை கடைகள் அடைக்கப்பட்டன.

சேலம்:
கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சேலத்தில் நேற்று மாலை கடைகள் அடைக்கப்பட்டன.
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கொரோனா தொற்று அதிகம் உள்ள இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக கொரோனா பாதிப்பு 100-க்கும் குறைவாக உள்ளது. இந்தநிலையில் கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்த மாவட்டத்தில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட கடைகள் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்ற புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தன.
கடைகள் அடைப்பு
சேலம் செவ்வாய்பேட்டை, கடைவீதி, சேலம் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், அழகாபுரம், அஸ்தம்பட்டி, சூரமங்கலம் என மாநகரில் பல்வேறு பகுதிகளில் மாலை 6 மணிக்கு நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் கடைகளை உடனடியாக அடைக்குமாறு அந்தந்த பகுதியில் உள்ள போலீசார் அறிவுறுத்தினர்.
முன்னதாக சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள வீரபாண்டியார் நகர் உள்பட மாலை 5 மணி அளவில் கடைகள் நிறைந்த பகுதிகளில் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்ட பின்னர் கடைவீதி, செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. உணவகங்கள், மருந்தகங்கள் மட்டும் அடைக்கப்படாமல் திறந்திருந்தன.
அபராதம் விதிப்பு
இதுதவிர அறிவிக்கப்பட்ட கடைகள் 6 மணிக்கு மேல் செயல்படுகிறதா? என மாநகராட்சி அதிகாரிகளும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 6 மணியை தாண்டி வெகுநேரமாகியும் அடைக்கப்படாத நகைக்கடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட 30 கடைகளுக்கு அபராதம் விதித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Next Story