அறிவியல் பாடப்பிரிவு கனவு நனவாகுமா
அறிவியல் பாடப்பிரிவு கனவு நனவாகுமா
வால்பாறை
வால்பாறை பகுதியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளின் உயர் கல்வியை கருத்தில் கொண்டும், பின் தங்கிய பகுதியில் உள்ள ஏழை மாணவர்களுக்கும் உயர் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் கடந்த 2006-ம் ஆண்டு சிங்கோனா பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் ஒரு பகுதியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரியாக தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து வால்பாறை ஸ்டேன்மோர் சந்திப்பு பகுதியில் புதிதாக கல்லூரி கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிதாக கல்லூரி வளாகம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இளம்கலை பாடப்பிரிவு வகுப்புகள் வால்பாறை பகுதியில் செயல்பட்டு வருகிறது. சிங்கோனா பகுதியில் முதுகலை பாடப்பிரிவு வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியாக செயல்பட்டு வந்த வால்பாறை கல்லூரி கடந்த 28.2.2019-ம் ஆண்டு அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியாக மாற்றப்பட்டது.
இதுகுறித்து வால்பாறை தோட்ட தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது
வால்பாறை பகுதியில் கல்லூரி தொடங்கி 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இது நாள் வரை அரசு கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படவில்லை.தற்போது வால்பாறை அரசு கல்லூரியில் பி.ஏ, (தமிழ், ஆங்கிலம்) பி.காம், பி.காம் (சிஏ), பி.பி.ஏ, பி.சி.ஏ, பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய இளங்கலை பாடப்பிரிவுகளும், இதே பாடப்பிரிவுகளில் முதுகலை பாடப்பிரிவுகள் மட்டுமே இருந்து வருகிறது.
பி.எஸ்சி (வேதியியல்), பி.எஸ்சி (இயற்பியல்), பி.எஸ்சி (தாவரவியல்), பி.எஸ்சி (விலங்கியல்) போன்ற எந்த அறிவியல் பாடப்பிரிவுகளும் கொண்டுவரப்படவில்லை.
இதனால் வால்பாறை பகுதியை சேர்ந்த மாணவ- மாணவிகள் அறிவியல் பாடப்பிரிவுகள் படிப்பதற்காக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பொள்ளாச்சி, கோவை போன்ற இடங்களில் உள்ள தனியார் கல்லூரிகளை நோக்கி செல்லும் நிலை உள்ளது. மேலும் அதற்காக அதிகளவிலான நன்கொடைகளை கொடுக்கும் நிலையும் உள்ளது.
பொள்ளாச்சி, கோவை பகுதியில் உள்ளூர் மாணவர்களுக்கு இடம் கொடுத்து விட்டு பிறகு காலியாக உள்ள இடங்களுக்கு வெளியூர்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கு இடம் தருகிறார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் வால்பாறை பகுதியைச் சேர்ந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள் அறிவியல் பாடப்பிரிவுகளில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே அனைத்து வசதிகளுடன் கூடிய வால்பாறை அரசு கலைமற்றும் அறிவியல் கல்லூரியில் இந்த ஆண்டே அறிவியல் பாடப்பிரிவுகள் கொண்டுவரப்படுவதற்கு சம்பந்தப்பட்ட உயர்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
வால்பாறை கலை அறிவியல் கல்லூரியில் அறிவியல் பாடப்பிரிவு கனவு நனவாகுமா என்கிற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகளிடம் உள்ளது.
Related Tags :
Next Story