வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம்:-
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவில் பொதுமக்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக நாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வழிபாட்டு தலங்களுக்கு அனுமதியில்லை
தமிழக அரசின் வழிகாட்டுதலின் பேரில், கொரோனா நோய் தொற்று 3-ம் அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை மாவட்டத்தில் சில வழிபாட்டு தலங்களுக்கும் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கும் பொதுமக்கள் செல்வதற்கு ஏற்கனவே அனுமதி இல்லை என்று ஆணை வெளியிடப்பட்டது.
தற்போது நிலவிவரும் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் தொடர்ச்சியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிற 31-ந் தேதி வரை பொதுமக்களுக்கான தரிசனம் மற்றும் அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் முற்றிலுமாக ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி பேராலய திருவிழாவில் பொதுமக்களுக்கு தடை
இந்த நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய திருவிழாவையொட்டி வருகிற 29-ந் தேதி முதல் அடுத்த மாதம்(செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பொதுமக்களுக்கு அனுமதியில்லை.
பேராலயத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளையும் காணொலிக்காட்சி வாயிலாக ஒளிபரப்பலாம். மேலும் வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து தங்கும் விடுதிகளும் இந்த நாட்களில் திறக்கப்படாது. திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடைகள் அமைப்பதற்கும், பிற கடைகள் மற்றும் உணவகங்கள் திறப்பதற்கும் அனுமதியில்லை.
எனவே நாகை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story