கோவை கரூர் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படும்
கோவை கரூர் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படும்
கோவை
விபத்துகளை குறைக்கும் வகையில் கோவை- கரூர் இடையே 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
ஆய்வு கூட்டம்
கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய 5 மாவட்டங் களின் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்க ளுடனான ஆய்வு கூட்டம் கோவை எஸ்.என்.ஆர். கலையரங்கில் நேற்று நடந்தது.
இதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார்.
அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், கா.ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, கோவை கலெக்டர் சமீரன், நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, திருப்பூர் கலெக்டர் வினீத், ஈரோடு கலெக்டர் கிருணனுண்ணி, கரூர் கலெக்டர் பிரபுசங்கர், கோவை மாநகராட்சி ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது
ஆக்சிஜன் படுக்கைகள்
பொதுப்பணித்துறை சார்பில் கோவை மாவட்டத்தில் ரூ.322 கோடியில் 51 பணிகளும், திருப்பூர் மாவட்டத்தில் ரூ.496 கோடியில் 68 பணிகளும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.182 கோடியில் 45 பணிகளும், நீலகிரியில் ரூ.504 கோடியில் 20 பணிகளும், கரூரில் ரூ.41 கோடியில் 46 பணிகளும் என கொங்கு மண்டலத்தில் மொத்தம் 230 பணிகள் ரூ.1585 கோடியில் நடைபெற்று வருகிறது.
கொரோனாவில் இருந்து மக்களை காக்க மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளை பொதுப்பணித்துறை தான் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் கோவையில் ரூ.16 கோடியில் 2,234 ஆக்சிஜன் படுக்கைகள், திருப்பூரில் ரூ.3.68 கோடியில் 723 படுக்கை, ஈரோட்டில் ரூ.10.46 கோடியில் 916 படுக்கை, நீலகிரியில் ரூ.3.72 கோடியில் 428 படுக்கை, கரூரில் ரூ.2.36 கோடியில் 637 படுக்கை என மொத்தம் 5678 ஆக்சிஜன் படுக்கைகள் ரூ.35.84 கோடியில் தயார் நிலையில் உள்ளது.
தரமான கட்டிடங்கள்
கட்டிடங்கள் தரமானதாக கட்ட வேண்டும். மணல், கட்டுமான கம்பிகள், சிமெண்டு, எம்.சாண்ட், கான்கிரீட் உள்ளிட்ட அனைத்தையும் உரிய பரிசோதனை செய்ய வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு செய்து வருங்கால தேவை தொடர்பான திட்டங்கள் தயாரிக்கப்படும் அது குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும்.
திருப்பூரில் சுரங்கப்பாதை, நீலகிரி மாவட்டத்தில் ரெயில்வே மேம்பாலம், காங்கேயத்தில் காங்கேயம் காளை சிலை அமைக்க வேண்டும் என்று கேட்டு உள்ளனர். அது தொடர்பாக திட்ட மதிப்பீடு தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
4 வழிச்சாலை
நீலகிரி மாவட்டத்தில் புதிய தொழில்நுட்ப வசதியுடன் சுவர் அமைத்து நிலச்சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூரில் இருந்து கோவைக்கு வரும்போது விபத்துகள் அதிகம் நடக்கிறது.
இதை தவிர்ப்பதற்காக கோவை- கரூர் இடையே 4 வழிச்சாலை அமைக்கப்படும். 2024-ம் ஆண்டுக்குள் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.
முதல்-அமைச்சரின் கனவு திட்டம் படி ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு பகுதியில் வனப்பகுதியில் குறுகிய சாலைகள் உள்ளன. அதை விரிவுபடுத்த வனத்துறை மூலம் தடையில்லா சான்று பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் குவாரிகள்
நிலுவையில் உள்ள ரெயில்வே பணிகளை மேற்கொள்ள ரெயில்வே மந்திரியை நேரில் சந்தித்து பேச உள்ளேன். சாலை பணிகள், மேம்பால பணிகளுக்கு நில எடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அமைச்சர் துரைமுருகன், முதல் -அமைச்சரின் அனுமதி பெற்று விதிகளுக்கு உட்பட்டு எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் மணல் குவாரிகளை திறக்க நடவடிக்கை எடுப்பார்.
விபத்து அதிகம் நடக்கும் இடங்களை கண்டறிந்து விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாவட்டத்தில் மேம்பால பணிகள் வேகப்படுத்தப்படும்.
சென்னை அண்ணா மேம்பாலம் உள்பட பல்வேறு மேம்பாலங்களை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவர் அவர் கூறினார்.
Related Tags :
Next Story