நெல்லையில் விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றம்


நெல்லையில் விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 11 Aug 2021 12:30 AM IST (Updated: 11 Aug 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் விளம்பர பலகைகள், ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். 

மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி சாலைகளில் விளம்பர பலகைகள் அதிகளவில் காணப்பட்டன. மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் பல விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது. 
இதையடுத்து அத்தகைய விளம்பர பலகைகளுக்கு ஒரு வார காலத்திற்குள் அனுமதி பெற வேண்டும், இல்லாவிட்டால் முன்னறிவிப்பு இன்றி அவை அகற்றப்படும் என்று மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன் ஏற்கனவே அறிவித்திருந்தார். 

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட 4 மண்டலங்களிலும் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணுசந்திரன் பார்வையிட்டார்.
நெடுஞ்சாலை துறை உதவி இயக்குனர் கிருஷ்ணசாமி தலைமையில் உதவி பொறியாளர் வேலாயுதம், சாலை ஆய்வாளர்கள் நாகூர்மீரான், ரிபாயி, முத்துக்குமாரசாமி, யாக்கோபு நாதன், இன்னாசி, கண்ணன், பேச்சிநாதன், முனியசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடியாக விளம்பர பலகைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

பலத்த பாதுகாப்பு 

பாளையங்கோட்டை திருச்செந்தூர் சாலை, மேலப்பாளையம் பகுதியில் சந்தை ரவுண்டானா, புதிய பஸ்நிலையம், திருவனந்தபுரம் சாலை, தச்சநல்லூர் பகுதியில் நெல்லை சந்திப்பு, நெல்லையப்பர் நெடுஞ்சாலை, மதுரை சாலை ஆகிய இடங்களில் இருந்த விளம்பர பலகைகள் மற்றும் சாலையோர ஆக்கிரமிப்பு பெட்டிகள் அகற்றப்பட்டன. 
அவை அனைத்தும் லாரிகளில் ஏற்றப்பட்டு, ராமையன்பட்டி குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு குவித்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story