இடப்பிரச்சினையில் தாக்குதல்; இருதரப்பை சேர்ந்த 3 பேர் மீது வழக்கு
இடப்பிரச்சினையில் தாக்குதல் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள பனையடி நடுத்தெருவை சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(வயது 45). இவருக்கும், இவரது உறவினர் அதே ஊரை சேர்ந்த மகாராஜன்(40) என்பவருக்கும் இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று காலை மகாராஜன் மற்றும் அவரது மனைவி தமிழ்ச்செல்வி ஆகியோர் கொளஞ்சிநாதன் வீட்டின் முன் நின்று தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ‘ஏன் காலையிலேயே பிரச்சினை செய்கிறீர்கள்’ என்று கேட்டுக்கொண்டே வீட்டை விட்டு வெளியில் வந்த கொளஞ்சிநாதனை, மகாராஜன் தனது கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், கொளஞ்சிநாதனை பிடித்து தள்ளிவிட்டு தமிழ்ச்செல்வி சண்டை போட்டதாகவும் கூறப்படுகிறது. அருகில் இருந்தவர்கள் தடுக்க வந்தபோது கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த கொளஞ்சிநாதன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று, தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இது குறித்து கொளஞ்சிநாதன் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் மகாராஜன், தமிழ்ச்செல்வி ஆகியோர் மீது சப்-இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
இதேபோல் கொளஞ்சிநாதனுக்கு சொந்தமான மாட்டை மகாராஜனுக்கு சொந்தமான இடத்தில் கட்டியிருந்ததால், ‘ஏன் மாட்டை எனது இடத்தில் கட்டி இருக்கிறீர்கள்’ என்று கேட்டபோது ஏற்பட்ட தகராறில் கொளஞ்சிநாதன் மகாராஜனை தகாத வார்த்தைகளால் திட்டி கையில் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாக்கியதாகவும், அருகில் இருந்தவர்கள் தடுக்க வந்த போது இரும்பு கம்பியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மகாராஜன் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று அரியலூர் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மகாராஜன் கொடுத்த புகாரின் பேரில் கொளஞ்சிநாதன் மீது வழக்குப்பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story