அரசு டாக்டர்கள், செவிலியர்களிடம் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
மதுரை காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் டாக்டர்கள், செவிலியர்களிடம் மனித உரிமைகள் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
மதுரை, ஆக
மதுரை காப்பகத்தில் குழந்தைகள் விற்கப்பட்ட விவகாரத்தில் டாக்டர்கள், செவிலியர்களிடம் மனித உரிமைகள் ஆணையம் நேற்று விசாரணை நடத்தியது.
குழந்தைகள் விற்பனை
மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் செயல்பட்டு வந்த இதயம் அறக்கட்டளையில் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து அறக்கட்டளையின் உரிமம் ரத்து செய்யப்பட்டு காப்பகம் மற்றும் உதவி மையம் சீல் வைக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இதுதொடர்பாக மதுரை தல்லாகுளம் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் ஏற்கனவே மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
டாக்டர்கள்
மேலும் இந்த வழக்கின் புகார்தாரர்கள் மற்றும் குழந்தைகளின் தாயார்கள் ஐஸ்வர்யா மற்றும் ஸ்ரீதேவி உள்ளிட்டோருக்கு, மனித உரிமை ஆணையத்தின் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. சமூக நலத்துறை அலுவலர், டாக்டர், செவிலியர் உள்ளிட்டோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. நேற்று இதற்கான விசாரணை மனித உரிமைகள் ஆணைய துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன் முன்னிலையில் மதுரை அழகர்கோவில் சாலையிலுள்ள அரசு சுற்றுலா மாளிகையில் நடந்தது.
அப்போது, சமூக நலத்துறை அலுவலர் கெலன்மேரி, நகர்புற மருத்துவ அலுவலர் லேகா ஜோதி, வடக்கு மண்டல மருத்துவ அலுவலர் கோதை மற்றும் மேலூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அசாருதின் மற்றும் மதுரை அரசு மருத்துவமனையின் 2 டாக்டர்கள், செவிலியர்கள், வக்கீல் முத்துக்குமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவர்களிடம் பல்வேறு தகவல்களை பெறப்பட்டன.
அப்போது இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரிடமும் விசாரிக்க வலியுறுத்தி, விசாரணை அதிகாரியிடம் வக்கீல் முத்துக்குமார், சமூக ஆர்வலர் அசாருதீன் ஆகியோர் மனு அளித்தனர்.
இன்று சிறையில் விசாரணை
இதுபோல், குழந்தையின் தாயார்களிடமும், மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் காப்பகத்திற்கு சென்று விசாரித்தனர். அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு அதனை பதிவு செய்து கொண்டனர்.
இந்த விவகாரத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவக்குமார் உள்ளிட்ட 9 பேரிடமும் இன்று விசாரிக்கப்படும் என ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளர்.
Related Tags :
Next Story