கோவில்பட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2 ஆயிரம்,செல்போன் திருடிய இளம்பெண் கைது
கோவில்பட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை திருடிய இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
ஓடும் பஸ்சில்...
கோவில்பட்டி அருகே உள்ள குமரெட்டியாபுரம் கீழ தெருவை சேர்ந்த ராஜ்குமார். இவரது மனைவி தெய்வானை (வயது 35). இவர் மதுரை சென்று விட்டு கோவில்பட்டிக்கு அரசு பஸ்சில் வந்து கொண்டிருந்தார். சாத்தூர் வந்ததும் ஒரு இளம்பெண் பஸ்சில் ஏறி தெய்வானை அருகில் அமர்ந்துகொண்டு பேசியபடியே வந்தார்.
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்து நின்றதும். தெய்வானை அருகில் அமர்ந்திருந்த இளம்பெண் வேகமாக பஸ்சை விட்டு இறங்கி சென்றார். இதில் சந்தேகமடைந்த தெய்வானை தன் கைப்பையை பார்த்தார். அதில் இருந்த ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த தெய்வானை கூச்சல் போட்டார்.
இளம்பெண் கைது
தப்பிசெல்ல முயன்ற அந்த பெண்ணை பஸ் பயணிகள் பிடித்து கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் ஆகியோர் விசாரணை செய்ததில், அந்த இளம்பெண் சாத்தூர் மேல காந்தி நகர் அய்யப்பன் மனைவி வள்ளி (23) என்பது தெரிய வந்தது. மேலும் தெய்வானை பையில் இருந்து திருடிய ரூ.2 ஆயிரம் மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story