விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை கலெக்டர் மோகன் உத்தரவு


விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை கலெக்டர் மோகன் உத்தரவு
x
தினத்தந்தி 11 Aug 2021 9:47 PM IST (Updated: 11 Aug 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம், 

ஆலோசனை கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் குறித்த  கணக்கெடுப்பு மற்றும் ஆரம்ப கல்வி பதிவேடு புதுப்பித்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் 6 முதல் 19 வயதுடைய பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற குழந்தைகள் தொடர்பான கணக்கெடுப்பு பணி மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணி தற்போது தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லாத, இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளை கண்டறிய சிறப்பு கணக்கெடுப்பு பணி ஏப்ரல் முதல் மே, அக்டோபர், ஜனவரி ஆகிய மாதங்களில் நடத்தப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின் மூலம் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்படும்.

பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பின்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக பெற்றோர்களில் ஒருவரையோ அல்லது இருவரையும் இழந்த மாணவர்களின் விவரங்களையும் கணக்கெடுக்க வேண்டும். கணக்கெடுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளும் ஆவணப்படுத்தி மேலும் கண்டறியப்படுகின்ற பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள், மாற்றுத்திறனுடைய குழந்தைகளை உடனடியாக பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு குடியிருப்பு பகுதிகளாக விழுப்புரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட செஞ்சி, வல்லம், ஒலக்கூர், மயிலம் ஆகிய ஒன்றியங்களில் உள்ள நரிக்குறவர், குடுகுடுப்புக்காரர் போன்ற புலம் பெயரும் இனத்தை சேர்ந்த பகுதிகளில் சிறப்பு கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

கணக்கெடுப்பு பணி

வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர் பயிற்றுனர்கள், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்பு பயிற்றுனர்கள், பிறதுறை அலுவலர்கள் இணைந்து கணக்கெடுப்பு மற்றும் ஆரம்பக்கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை பாதுகாப்பு அலுவலர் லலிதா, சமூகநல அலுவலர் விஜயலட்சுமி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரகுபதி, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கோகிலா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தணிகைவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story