தேனீக்கள் கொட்டியதில் தேனி கலெக்டர் காயம்; 4 பேர் மயக்கம்


தேனீக்கள் கொட்டியதில் தேனி கலெக்டர் காயம்; 4 பேர் மயக்கம்
x
தினத்தந்தி 11 Aug 2021 9:47 PM IST (Updated: 11 Aug 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

வைகை அணையில் தண்ணீர் திறந்தபோது தேனீக்கள் கொட்டியதில் தேனி கலெக்டர் காயம் அடைந்தார். 4 பேர் மயக்கம் அடைந்தனர்.

ஆண்டிப்பட்டி:
வைகை அணையில் இருந்து ஒருபோக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு முன்பு அணையின் மதகு பகுதியில் பூஜை நடைபெற்றது. பின்னர் மதகை இயக்கி அமைச்சர்கள் தண்ணீரை திறந்து வைத்தனர். அப்போது மதகு பகுதியில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் கலைந்து, அமைச்சர்கள், கலெக்டர்கள், போலீசார் என அங்கிருந்தவர்களை விரட்டி, விரட்டி கொட்ட தொடங்கியது. இதனால் 2 பிரதான மதகுகளை மட்டுமே திறந்த அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள், அதிகாரிகள் பதறியடித்தபடி அங்கிருந்து சென்று அவரவர் காரில் ஏறி தப்பினர்.
இருப்பினும் தேனீக்கள் கொட்டியதில் தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் காயமடைந்தார். இதுதவிர பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் குபேந்திரன், பணியாளர்கள் முத்துப்பாண்டி, கணேசன், பாண்டித்துரை ஆகிய 4 பேர் தேனீக்கள் கொட்டியதால் மயங்கி விழுந்தனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் வைகை அணை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story