இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் மீண்டும் சேர்க்க வேண்டும் மாவட்ட வருவாய் அலுவலர் அறிவுறுத்தல்
இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் அறிவுறுத்தி உள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பாக பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் 6 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி செல்லா, பள்ளி இடைநின்ற மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகள் கணக்கெடுப்பு பணி வருகிற 31-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த கணக்கெடுப்பின்போது இடைநிற்றலுக்கான காரணங்களை கண்டறிந்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் அதனை நிவர்த்தி செய்ய வேண்டும்.
கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்த அல்லது ஒற்றை பெற்றோருடைய குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்து பாடப்புத்தகங்கள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல், அவர்களின் எதிர்கால நலன்கருதி இப்பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் முதன்மைக்கல்வி அலுவலர் தியாகராஜன், மாவட்ட கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (மன்னார்குடி), பார்த்தசாரதி (திருவாரூர்), மாவட்ட உதவி திட்ட அலுவலர் பாலசுப்பிரமணியன், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் புவனா, புள்ளியியல் அலுவலர் தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story