மன்னார்குடியில், வாலிபர் கொலை: நண்பர்கள் 4 பேர் கைது
மன்னார்குடியில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நண்பர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்பிச்சை. இவருடைய மகன் இஸ்ரத் ஷேக் வலிது(வயது 21). இவர், டிப்ளமோ படித்தவர். நேற்று முன்தினம் இவர் மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் காயத்துடன் பிணமாக கிடந்தார்.
இதை அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு இளஞ்செழியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் ஆகியோர் அங்கு சென்று உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ‘பப்ஜி’ விளையாடுவது தொடர்பாக நண்பர்களுடன் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இஸ்ரத் ஷேக் வலிது கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்த விவரங்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-
மன்னார்குடியில் உள்ள தனது பாட்டி வீட்டில் இஸ்ரத் ஷேக் வலிது தங்கி படித்து வந்தார். ஒரு ஆண்டுக்கு முன்பு படிப்பு முடிந்ததும் அவர் முத்துப்பேட்டைக்கு சென்று விட்டார். அவருடைய நண்பர் நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த முகமது வாகித்(20). இவர்களுக்கு இடையே ‘பப்ஜி’ விளையாடுவதில் முன்விரோதம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து சமாதானம் பேசலாம் என கூறி முகமது வாகித், இஸ்ரத்தை அழைத்துள்ளார்.
அதன்படி மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு இஸ்ரத், முகமது வாகித் மற்றும் அவருடைய நண்பர்களான நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த தீன்ஹனீஸ்(23), மப்ரூக் முகமது(20), அக்பர்பாஷா(20) ஆகியோர் வந்து உள்ளனர். அப்போது இஸ்ரத் மற்றும் முகமது வாகித் ஆகியோர் இடையே வாக்குவாதம் முற்றியது.
இந்த நிலையில் முகமது வாகித், தீன்ஹனீஸ், மப்ரூக் முகமது, அக்பர்பாஷா ஆகியோர் சேர்ந்து இஸ்ரத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்று விட்டனர். இவ்வாறு போலீசார் கூறினர். இந்த நிலையில் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் நாச்சிகுளத்தை சேர்ந்த முகமது வாகித், தீன்ஹனீஸ், மப்ரூக் முகமது, அக்பர்பாஷா ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story