குழாய் உடைப்பு குடிநீர் வினியோகம் பாதிப்பு: சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்
புவனகிரி அருகே குழாய் உடைக்கப்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையோர தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி,
புவனகிரி அருகே மேல் புவனகிரி ஒன்றியம் மேலமூங்கிலடி ஊராட்சியில் கிராம சாலை பராமரிப்பு திட்டத்தின் கீழ் மேலமூங்கிலடியில் இருந்து தையாகுப்பம் வரை பெரிய பாசன வாய்க்காலையொட்டி சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதற்கட்டமாக ரூ.20 லட்சம் செலவில் சாலையோரம் 40 மீட்டர் தூரம் வரை தடுப்புச்சுவர் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்காக தொழிலாளர்கள் பள்ளம் தோண்டியபோது, அந்த வழியாக செல்லும் குடிநீர் குழாய் உடைந்து சேதமானது. இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் தலைமையில் தடுப்புச்சுவர் அமைக்கும் இடத்துக்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் சேதமடைந்த குழாயை சீரமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்யக்கோரி தடுப்புச்சுவர் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே சேதமடைந்த குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டதோடு, குடிநீர் வினியோகம் செய்ய ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story