தவறான அடங்கல் சான்று வழங்கும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அபராதம்; கலெக்டர் எச்சரிக்கை
விவசாயிகளுக்கு தவறான அடங்கல்சான்று வழங்கும் கிராமநிர்வாக அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நெமிலி
நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனைசெய்ய விவசாயிகளுக்கு தவறான அடங்கல்சான்று வழங்கும் கிராமநிர்வாக அலுவலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 29 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டிருந்தார்.
இந்தநிலையில் வியாபாரிகள் தாங்கள் சேகரித்து வைத்துள்ள நெல் மூட்டைகளை கொண்டு வந்து கொள்முதல் நிலையத்தில் குவித்து வருவதாக புகார் எழுந்தது. இதனால் விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் நெமிலியில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர். நெமிலி மண்டல துணை தாசில்தார் குமார் வரவேற்றார்.
அபராதம் விதிக்கப்படும்
கூட்டத்தில் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் நெல் மூட்டைகளை் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வராமலேயே விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக 8 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கிராமநிர்வாக அலுவலர்கள் தரும் அடங்கல் சான்றுக்கும், கொள்முதல் நிலையத்திற்கு வரும் நெல் மூட்டைகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பது கண்டறியப்பட்டது.
தவறான சான்றுகளை கொடுத்திருந்தால் அதனை உடனடியாக திரும்ப பெற்றுக்கொள்ள வேண்டும். தவறு செய்தது கண்டுபிடிக்கப்பட்டால் எத்தனை மூட்டை நெல்லுக்கு அவர் தவறான அடங்கல் சான்று கொடுத்துள்ளார் என்பதை கணக்கிட்டு ஒரு மூட்டைக்கு ரூ.1,500 கிராமநிர்வாக அலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கப்படும்.
கண்காணிக்க வேண்டும்
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் என்ன நடக்கிறது என்பதை வருவாய் ஆய்வாளர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள் கண்காணித்து தாசில்தாருக்கு தகவல் தர வேண்டும்.
விவசாயிகள் போர்வையில் வியாபாரிகள் யாரும் கொள்முதல் நிலையத்திற்கு வராமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஊழியர்களும், அதிகாரிகளும் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
தாசில்தார்கள் பழனிராஜன், சுமதி, வெற்றிகுமார் ஆகியோரும் பேசினர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் பிரேமா, ரவிச்சந்திரன், வட்ட வழங்கல் அலுவலர் வெங்கடேசன், கிருஷ்ணன் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story