காங்கிரஸ் கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் நிர்வாகிகள் வெளிநடப்பு
வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் காமராஜர் அறக்கட்டளை சொத்துகள் தனியார் வசம் உள்ளதாக கூறி நிர்வாகிகள் சிலர் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்
வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் காமராஜர் அறக்கட்டளை சொத்துகள் தனியார் வசம் உள்ளதாக கூறி நிர்வாகிகள் சிலர் வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நிர்வாகிகள் வெளிநடப்பு
வேலூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் வாகித்பாஷா, முன்னாள் மாவட்ட பொருளாளர் சி.கே.தேவேந்திரன் மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு அழைப்பாளர்களாக காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் ஏகடூர் ஆனந்தன், மாநில செயலாளர் எம்.ஜி.மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் சி.கே.தேவேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் 10-க்கும் மேற்பட்டோர், காங்கிரஸ் கட்சி அலுவலகம் இயங்கி வரும் காமராஜர் அறக்கட்டளை சொத்துக்கள் தனியார் வசம் உள்ளதாகவும், அதனை மீட்கும் வரை எந்த விதமான கட்சி கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மாட்டோம் என்று கூறி வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் அவர்கள் காமராஜர் அறக்கட்டளை சொத்துகளை மீட்கக்கோரி கோஷங்கள் எழுப்பினார்கள். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது...
அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில், வேலூர் மாநகராட்சி பகுதிகளில் காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்துவது குறித்து நிர்வாகிகள் பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் இருந்து கட்சி நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தது குறித்து மாநகர மாவட்ட தலைவர் டீக்காராமன் கூறுகையில், வேலூர் காமராஜர் அறக்கட்டளை விவகாரத்தில் கட்சி மேலிடத்துக்கு தெரியாமல் எதுவும் நடைபெறவில்லை.
நிர்வாகிகள் யார் மீதும் எனக்கு காழ்ப்புணர்ச்சி இல்லை. கட்சிக்கு எதிராக செயல்படும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மீது மேலிடத்துக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.
Related Tags :
Next Story