10 நாட்களுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்


10 நாட்களுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 Aug 2021 12:44 AM IST (Updated: 12 Aug 2021 12:44 AM IST)
t-max-icont-min-icon

10 நாட்களுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை:
10 நாட்களுக்கு பிறகு நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 

பக்தர்களுக்கு தடை

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெல்லை டவுன் நெல்லையப்பர், பாபநாசம் பாபவிநாச நாதர், காரையாறு சொரிமுத்து அய்யனார் ஆகிய கோவில்களில் ஆடிப்பூரம் மற்றும் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் கடந்த 1-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இருந்த போதிலும் இந்த கோவில்களில் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பாபநாசம், காரையாறு  கோவில்களில் நேற்று முன்தினம் முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

நெல்லையப்பர் கோவில்

ஆனால் நெல்லையப்பர் கோவிலில் நேற்று முன்தினம் ஆடிப்பூர விழாவின் சிகர நிகழ்ச்சியான அம்பாளுக்கு முளைகட்டு வைபவம் நடைபெற்றது. இதில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் நேற்று முன்தினமும் கூடுதலாக ஒரு நாள் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது.
அந்த தடை முடிவடைந்து 10 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் நெல்லையப்பர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையாக நின்று நெல்லையப்பர், காந்திமதி அம்பாளை தரிசனம் செய்தனர். 

லட்சுமி நரசிங்க பெருமாள்

இதேபோல் நெல்லை டவுன் மேலமாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்கபெருமாள் கோவிலில் ஆண்டாள் தாயாருக்கு ஆண்டு தோறும் ஆடிப்பூர மஹோத்சவம் நடைபெறும். இந்த ஆண்டு நேற்று காலை ஆடிப்பூர மஹோத்சவ பூஜை நடைபெற்றது.
பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடைபெற்றது. ஆண்டாளுக்கு 1,008 வளையல் அலங்காரம் மற்றும் அனைத்து வகை கனிகள் வைத்து சிறப்பு பூஜை, திருவாராதனம் சாத்துமுறை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு திருமாங்கல்ய கயிறு, மஞ்சள், குங்குமம், வளையல்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Next Story