தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணிகள் மும்முரம்
தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
தென்காசி:
தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலக கட்டிட பணி மும்முரமாக நடைபெறுகிறது. குறிப்பிட்ட காலமான அடுத்த ஆண்டு அனைத்து பணிகளும் முடிவடைகிறது.
புதிய மாவட்டம்
தென்காசி பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான நெல்லையில் இருந்து பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்ட தனி மாவட்ட கோரிக்கை அப்போதைய தென்காசி எம்.எல்.ஏ. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் சட்டமன்றத்தில் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் கடந்த 2019-ம் ஆண்டு தென்காசி மாவட்டம் உதயமானது. இதன்பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முதன்முதலில் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது.
இதையடுத்து அந்த அலுவலகத்துக்கு எதிரே புதிதாக கட்டப்பட்டு வந்த மாவட்ட பதிவாளர் அலுவலக கட்டிடத்தில் இயங்கியது. இதன்பிறகு தற்போது ெரயில் நகரிலுள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இருப்பினும் இடப்பற்றாக்குறை காரணமாக இன்னும் பல அலுவலகங்கள் நெல்லையிலேயே இயங்கி வருகின்றன.
புதிய கட்டிடம்
தென்காசி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கு அப்போதைய அ.தி.மு.க. அரசு ரூ.119 கோடி ஒதுக்கீடு செய்தது. இதற்காக இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. பல்வேறு இடங்களை அரசுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். முடிவாக தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரி அரசு விதைப்பண்ணை இருந்த இடத்தில் கட்டுவதற்கு பூர்வாங்க பணிகள் தொடங்கின. ஆனால் இங்கு பொதுமக்கள் எளிதில் வந்து செல்ல முடியாது என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன் மற்றும் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து தி.மு.க. சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டக் கூடாது என வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் அரசு அந்த இடத்தில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட மாட்டாது என கூறவே அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதன்பிறகு தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்கும் பணி தொடங்கியது.
விறுவிறுப்பான பணிகள்
இந்த பணி கடந்த ஜனவரி மாதம் 4-ந் தேதி தொடங்கியது. பணிகள் தொடங்கிய சில நாட்களில் கொரோனா ஊரடங்கு காரணமாக சுமார் 1½ மாதங்களாக பணிகளில் தொய்வு ஏற்பட்டது. தற்போது கட்டிட பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன. தினமும் சராசரியாக 100 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். சுமார் 4 லட்சம் சதுர அடி பரப்பில் தரைத்தளம் தவிர நவீன வசதிகளுடன் 6 அடுக்கு கட்டிடமாக கட்டப்படுகிறது. இதற்காக காங்கிரீட் கலவை தயார் செய்யும் எந்திரம் இங்கு நிறுவப்பட்டுள்ளது. இடையில் ஏற்பட்ட தொய்வினால் பணிகளுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என இங்கு பணியாற்றும் பணியாளர்கள் கூறுகிறார்கள். பெரும்பாலும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப்பணி தொடங்கும்போது வருகிற 2022-ம் வருடம் செப்டம்பர் மாதம் 3-ந் தேதி பணிகளை முடிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த காலத்திற்குள் கொரோனா போன்று எதிர்பாராத இடர்கள் வராத நிலையில் நிச்சயமாக குறிப்பிட்ட காலத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் அலுவலகம் இந்த இடத்தில் வரும்போது அருகில் பஸ் நிலையம் இருப்பதால் பொதுமக்கள் எந்த ஊரில் இருந்தும் எளிதில் இந்த அலுவலகத்திற்கு வரமுடியும்.
Related Tags :
Next Story