சேலத்தில் அம்மன் கோவில்களில் வளையல் அலங்காரம்
ஆடிப்பூரத்தையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சேலம்,
ஆடிப்பூரத்தையொட்டி சேலத்தில் உள்ள அம்மன் கோவில்களில் அம்மனுக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்து பூஜை நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆடிப்பூரம்
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரத்தில் அம்மன் அவதரித்தார். அன்றைய தினம் அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடிப்பூரத்தில் அம்மனுக்கு சாத்தப்பட்ட வளையல்களை திருமணம் ஆகாத பெண்கள் வாங்கி அதை அணிந்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், அதேபோல் திருமணம் ஆகி குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு மகப்பேறு உண்டாகும் என்பதும் ஐதீகம் ஆகும்.
வளையல் அலங்காரம்
அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
அம்மனை பக்தர்கள் நேரடியாக தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றியும், கூழ், மாவு, சர்க்கரை பொங்கலை படைத்தும் வழிபட்டனர்.
குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.
அஸ்தம்பட்டி மாரியம்மன்
இதேபோல், அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து ஒரு லட்சம் வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அஸ்தம்பட்டி, மணக்காடு, பெரியபுதூர், வின்சென்ட் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். கோவில் முழுவதும் வளையல்கள் கட்டப்பட்டிருந்தன.
நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் அம்மனுக்கு முதலில் பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்து அதன்பிறகு பக்தர்கள் வழங்கிய வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சேலம் மாநகரில் செவ்வாய்பேட்டை மாரியம்மன் கோவில், குகை காளியம்மன், மாரியம்மன் கோவில், அன்னதானப்பட்டி மாரியம்மன், அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் உள்பட பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் நேற்று ஆடிப்பூரத்தையொட்டி அம்மன்களுக்கு வளையல்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story