பஸ் நிலைய கட்டிடத்தியன் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது


பஸ் நிலைய கட்டிடத்தியன் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
x
தினத்தந்தி 12 Aug 2021 1:30 AM IST (Updated: 12 Aug 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் பஸ் நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததில் நேரக்காப்பாளர் காயமடைந்தார்.

ஜெயங்கொண்டம்:

சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதில் திருச்சி செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் புறநகர் போலீஸ் நிலையம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விசாரணை அலுவலகம் அமைந்துள்ளது.
இந்த அலுவலகத்தின் முகப்பு பகுதியில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து சிமெண்டு பூச்சுகள் நேற்று திடீரென பெயர்ந்து விழுந்தன. அப்போது அந்த பகுதியில் பயணிகள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இருப்பினும் தனியார் நேரக் காப்பாளரான அற்புதம் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும் காப்பாளருடைய இருசக்கர வாகனத்தில் கண்ணாடிகள் உடைந்தன.
தொடர்ந்து பெயர்ந்து விழுகிறது
இந்த பஸ் நிலையமானது கட்டப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள ஒரு டீக்கடை மேற்கூரையின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து, எண்ணெய் சட்டியில் விழுந்ததில், பலகாரம் செய்யும் மாஸ்டர் மீது கொதிக்கும் எண்ணெய் கொட்டியது. மற்றொரு கடையில் சிமெண்டு பூச்சுகள் விழுந்தபோது, உள்ளே ஆட்கள் இல்லாததால் விபரீதம் ஏற்படவில்லை. மற்றொரு கடையிலும் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.
இதேபோல் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து, பஸ்சுக்காக காத்திருந்த பயணி ஒருவரின் தலையில் விழுந்ததில், அவர் பலத்த காயம் அடைந்தார். கடை உரிமையாளரும் காயமடைந்தார். ெதாடர்ந்து ஒவ்வொரு கடையாக சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தநிலையில், நேற்று விசாரணை அலுவலக மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது.
கோரிக்கை
எனவே இது குறித்து நகராட்சி நிர்வாகம் சார்பில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடைகள் உள்ளிட்ட இடங்களில் கட்டிடத்தின் அனைத்து பகுதியிலும் கண்காணித்து, பெரும் விபத்து ஏற்படும் முன்பாகவே சீரமைப்பு பணிகளை செய்ய வேண்டும் என்று பயணிகளும், பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் பழைய கட்டிடமாக இருப்பதால், இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story