ஆண்டாள் கோவிலில் தங்கத்தேரோட்டம்


ஆண்டாள் கோவிலில் தங்கத்தேரோட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2021 8:22 PM GMT (Updated: 11 Aug 2021 8:22 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிப்பூர விழாவில் நேற்று தங்கத்தேரோட்டம் நடந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெற்றுவரும் ஆடிப்பூர விழாவில் நேற்று தங்கத்தேரோட்டம் நடந்தது. 
ஆடிப்பூர தேர்த்திருவிழா
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவில் உள்ளது. 
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆண்டாள் பிறந்தபூர நட்சத்திரத்தன்று ஆடிப்பூர தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டுக்கான விழா, கடந்த 3-ந் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 
தங்கத்தேரோட்டம்
ஆடிப்பூர தினமான ேநற்று முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நடைபெற்று இருக்க வேண்டும். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கை எதிரொலியாக கோவில் வளாகத்தின் உள்ளேயே விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதால், நேற்று தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. 
இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு ஆண்டாள், ெரங்கமன்னார் அலங்கரிக்கப்பட்டு மேளதாளத்துடன் பிரகாரத்திலுள்ள தங்கத்தேரில் எழுந்தருளினர். அதன்பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 6.05 மணிக்கு தங்கத்தேரோட்டம் தொடங்கியது.
கலெக்டர்-எம்.எல்.ஏ.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், கோவில் தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.
விழாவில்  மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜ், சப்-கலெக்டர் பிரித்திவிராஜ், இந்து சமய அறநிலையத்துறை உயர் அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் செய்திருந்தார். விழாவையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
வெளியே நின்று தரிசனம்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தங்கத்தேரோட்டத்தை காண பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே கோவிலுக்கு வெளியே நின்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

Next Story