இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளப்படுத்த ஆளில்லை- ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய திருச்சி தடகள வீரர் ஆரோக்கியராஜீவ் பேட்டி
இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளப்படுத்த ஆளில்லை என்று ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய திருச்சி வீரர் ஆரோக்கியராஜீவ் கூறினார்.
திருச்சி,
இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளப்படுத்த ஆளில்லை என்று ஒலிம்பிக்கில் பங்கேற்று திரும்பிய திருச்சி வீரர் ஆரோக்கியராஜீவ் கூறினார்.
ஒலிம்பிக் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை மாதம் 23-ந் தேதி முதல் கடந்த 8-ந் தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. ஒலிம்பிக் தடகளப்பிரிவில் இந்தியா சார்பில் திருச்சி லால்குடியை சேர்ந்த ஆரோக்கியராஜீவ் கலந்து கொண்டார். டோக்கியோவில் இருந்து நாடு திரும்பிய ஆரோக்கியராஜீவ் திருச்சிக்கு ரெயில் மூலம் வந்தார். திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் அவருக்கு மாலை, பூரணகும்ப மரியாதை அளித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பு நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர், மாவட்ட தடகள சங்க நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து ஆரோக்கியராஜீவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அடையாளப்படுத்த ஆளில்லை
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒலிம்பிக்கில் வெற்றிபெறும் வாய்ப்புகள் இருந்தாலும், சிறு,சிறு தவறுகளால் அது கிடைக்காமல் போய்விட்டது. முன்பெல்லாம் நம்மிடம் பயிற்சி தரமாக இருக்காது. ஆனால் இப்போது தரமான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் ஒலிம்பிக் அளவுக்கு முன்னேறவில்லை. இங்குள்ள மைதானங்களைவிட அங்குள்ள மைதானங்கள் முற்றிலும் வேறு மாதிரி இருக்கிறது. சூழ்நிலைகள் வேறுமாதிரியாக இருக்கிறது. இதனால் பல்வேறு விஷயங்களில் முன்னேற்றம் அடைய வேண்டி உள்ளது.
காமன்வெல்த் போட்டியில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்துவோம். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது சிறிய கனவு கிடையாது. அதற்காக 5 முதல் 10 ஆண்டுகள் வரை உழைத்தால் தான் வெற்றி பெற முடியும். இது மிகப்பெரிய தொடர் முயற்சி. இந்தியாவில் திறமையான விளையாட்டு வீரர்கள் நிறையபேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அடையாளப்படுத்த தான் ஆளில்லை.
எங்களுக்கு இந்த அளவு அரசு உதவி செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் ஒலிம்பிக் செல்ல இருக்கும் வீரர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பே தேவையான பயிற்சி, ஊட்டச்சத்து போன்றவற்றை அளித்து தயார்படுத்தினால் உதவிகரமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மகனை நினைத்து பெருமை
ஆரோக்கியராஜீவின் தாய் லில்லிசந்திரா கூறும்போது, "நாட்டுக்காக ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுவிட்டு திரும்பிய எனது மகனை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது. இத்தகைய தங்க மகனை பெற்றதற்கு கடவுளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்" என்றார். அப்போது, மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரபு, திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் ராஜூ, மக்கள் சக்தி இயக்க ஆலோசகர் நீலமேகம், பயிற்சியாளர் ராமச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
அர்ஜூனா விருதுபெற்ற ஆரோக்கியராஜீவ், ஏற்கனவே 3 முறை ஆசிய போட்டிகளிலும், பலமுறை தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார். மேலும் கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து, தற்போது 2-வது முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story