கோவை மாவட்டத்தில் 10,950 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10,950 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவை,
கோவை மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் இந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும் 43 சதவீதமாக உள்ள கொரோனா நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க பொதுமக்கள் தடுப்பூசி போட்டு கொள்ளுமாறு அறிவித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் தடுப்பூசிகள் இருப்புக்கு ஏற்ற வகையில் ஊரக பகுதிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் அவ்வப்போது போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று மாநகராட்சி பகுதியில் கோவேக்சின் 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. இதற்காக காலை 8 மணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 9 மணிக்கு பொதுமக்களுக்கு டோக்கன் வினியோகிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 10 மணி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின.
இதன்படி கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், கணபதி உள்பட 10 மையங்களில் தலா 250 வீதம் 2,500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முன்னதாக கோவேக்சின் முதல் தவணை போட வந்தவர்களுக்கு தடுப்பூசி போடவில்லை. அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதேபோல் நேற்று கோவை மாவட்டத்தில் காரமடை, அன்னூர், பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் 45 இடங்களில் 8,450 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மொத்தம் 10 ஆயிரத்து 950 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story