மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க வேண்டும் - கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு


மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க வேண்டும் - கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவு
x
தினத்தந்தி 12 Aug 2021 8:36 AM IST (Updated: 12 Aug 2021 8:40 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

திருப்பத்தூர்,

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்க வேண்டும். இதனால் கழிவுநீர் கால்வாய்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கலப்பதை தவிர்க்க முடியும். செப்டம்பர் மாத இறுதிக்குள் இத்திட்டம் மாவட்டத்தில் முழுமையாக செயல்படுத்தப்படும். 

செப்டம்பர் மாதம் 30-ந்் தேதி அன்று மாவட்டத்தில் எத்தனை ஊராட்சிகளில் 100 சதவீதம் வீடுகளுக்கே சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்படுகிறதோ அதில் சிறந்த 3 ஊராட்சி செயலாளர்களுக்கு அக்டோபர் மாதம் 2-ந் தேதி அன்று சான்றிதழ் வழங்கப்படும். 

திருப்பத்தூர் மாவட்டத்தை சுகாதாரமாக பேணி காத்து குப்பைகள் இல்லாத தூய்மை நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகளிலும் தெருவிளக்குகள் முழுமையாக பழுது நீக்கம் செய்யப்பட்டு எரியவும், குடிநீர் முழுமையாக வழங்கவும், குடிநீர் குழாய்களில் பழுதுகளை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  தற்போது பருவமழை தொடங்க இருப்பதால் வரத்து கால்வாய்களை சுத்தம் செய்து மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கு.செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அருண் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story