அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா 3-ம் அலையை தடுக்க முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா 3-வது அலையை தடுக்க முன்னேற்பாடு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் அறிவுறுத்தினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா 2-ம் அலையின் போது 8 அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகளுக்கும் சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா 3-வது அலை தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்ஏற்பாடுகள் குறித்து நேற்று நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனர் குருநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 8 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா 3-வது அலை தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் விரைவாக செய்ய வேண்டும். கொரோனா சிகிச்சை மட்டுமல்லாது சர்க்கரை, ரத்த கொதிப்பு, விபத்து காய சிகிச்சை போன்ற அனைத்து சிகிச்சைகளும் சிறந்த முறையில் மக்களுக்கு கிடைத்திட நாம் பாடுபட வேண்டும்.
பிரசவம், பச்சிளம் குழந்தைகள் பகுதி மிக சிறந்த முறையில் செயல்பட்டு தாய்சேய் நலம் காக்கப்படவேண்டும். சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் மிக சிறந்த முறையில் கிடைக்க வேண்டும். இதற்காக மேலும் 3 டயாலிசிஸ் கருவிகள் திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் மருத்துவமனைக்கு தலா ஒன்று வீதம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முக்கியமாக மலைவாழ் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொல்லிமலை அரசு மருத்துவமனையில் மலைவாழ் மக்கள் அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அவர் நாமக்கல் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி முதன்மை டாக்டர்களுடன் கொரோனா 3-ம் அலை தடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின் போது முன்னாள் இயக்குனர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) இன்பசேகரன், நலப்பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) ராஜ்மோகன், தேசிய குழும திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ரங்கநாதன், டாக்டர்கள் செந்தில்குமார், வினோதினி மற்றும் 8 அரசு மருத்துவமனையின் முதன்மை மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் 8 அரசு மருத்துவமனைகளில் 374 கொரோனா சிகிச்சை அளிக்கும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் தற்போது உள்ளது. இதேபோல் குழந்தைகளுக்கு 50 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story