5 பேர் பலியான சம்பவம் எதிரொலி: ரூ.22 லட்சத்தில் கோவில் குளத்தை சுற்றி சுவர் அமைக்கும் பணி தீவிரம்
கும்மிடிப்பூண்டி அருகே கோவில் குளத்தில் மூழ்கி 3 சிறுமிகள் உள்பட 5 பேர் பலியான சம்பவத்தின் எதிரொலியாக மேற்கண்ட குளத்தை சுற்றி ரூ.22 லட்சத்தில் சுற்றுசுவர் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி அங்காளம்மன் கோவில் உள்ள குளத்தில் கடந்த மாதம் 14-ந் தேதி மூழ்கி புதுகும்மிடிப்பூண்டியை சீத்தாம்மாள் தெருவைச் சேர்ந்த ராஜீ என்பவரின் மனைவி சுமதி (வயது 35), அவரது மகளான அஸ்விதா (14), அதே தெருவைச்சேர்ந்த முனுசாமி என்பவரின் மனைவி ஜோதி லட்சுமி (32), தேவேந்திரன் மகள் ஜீவிதா (13), குணசேகரன் என்பவரது மகள் நர்மதா (12) என 3 சிறுமிகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்த தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.5 லட்சத்தை வழங்கினார்.
இந்தநிலையில், பாதுகாப்பு கருதி மேற்கண்ட கோவில் குளத்தை சுற்றி சுற்று சுவர் அமைத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமார் நேரில் வலியுறுத்தி இருந்தார். அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் மாவட்ட கலெக்டர் தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், அந்த கோவில் குளத்தை சுற்றி தற்போது ரூ.21 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் சுற்று சுவர் அமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது. இதனை கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ., டி.ஜெ.கோவிந்தராஜன், தாசில்தார் மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன், பொறியாளர் நரசிம்மன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த பணி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story