பூந்தமல்லி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
பூந்தமல்லி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி,
பூந்தமல்லி அடுத்த பாப்பான் சத்திரம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 42). இவரது மகள் திவ்யா (22). எம்.எஸ்சி. பட்டப்படிப்பு படித்துள்ளார். இந்த நிலையில் இவர் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார். இதற்கிடையே நேற்று காலை வழக்கம் போல் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து மாலை வீட்டிற்கு திரும்பி வந்த பெற்றோர், வெகு நேரமாகியும் வீட்டின் கதவை திவ்யா திறக்காததால் சந்தேகம் அடைந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது, அவர் தூக்குப்போட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன திவ்யா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், வேலை இல்லாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அதே போல், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த வாலிபர் வேலாயுதம் (21). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவரது தந்தை இறந்ததாக தெரிகிறது. இதனால் வேலாயுதம் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2-ந்தேதி வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை அவர் குடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வேலாயுதம், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள உட்கோட்டை பகுதியில் மரக்கரிக்கடை சூளை உள்ளது. இங்கு திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி, மலையூர் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 25) என்பவர், தனது மனைவி ராஜேஸ்வரி (20) மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் விக்னேஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். அப்போது குடிசை வீட்டில் இருந்த ராஜேஸ்வரி திடீரென பூச்சி மருந்து குடித்து உயிருக்கு போராடினார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு, சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ராஜேஸ்வரி பரிதாபமாக இறந்துபோனார். இச்சம்பவம் குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story