பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நிதி ஒதுக்க வேண்டி - கலெக்டரிடம் கோரிக்கை மனு
பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க நிதி ஒதுக்குமாறு கலெக்டரிடம் ஊராட்சிமன்ற தலைவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சிமன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் சுமிதா சுந்தர் தலைமையில் திரளான ஊராட்சி மன்ற தலைவர்கள் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது.,
பொதுமக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க மாநில நிதிக்குழு மானியம் முழுமையாக ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும். ஊராட்சிக்கு வழங்கவேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தில் அதிக அளவில் மின் கட்டணத்திற்கு ஊராட்சி கணக்கு அதிகமாக தொகை ஒதுக்கப்படுகிறது.
ஆகையால் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதியையும் பொதுமக்களுக்கு செய்து தர முடியவில்லை. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நிர்வாக சீர்கேடு ஏற்படுகிறது. கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் ஊராட்சியில் போதுமான நிதி இல்லாத காரணத்தினால் எந்த அடிப்படை வசதியும் செய்துதர முடியவில்லை.
ஆகையால் இதனை ஆய்வு செய்து மின் கட்டணத்திற்கு என்று ஊராட்சி பொதுநிதி ஒதுக்க வேண்டும். தமிழக அரசு வழங்கும் 14-வது நிதிக்குழு மானியம், 15-வது நிதிக்குழு மானியம் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதுநாள் வரை அந்த தொகையை வங்கியில் உள்ளது. ஊராட்சி மன்ற தலைவர்கள் பொறுப்பேற்றவுடன் அதற்கான பணிகளை தேர்வு செய்து நிர்வாக அனுமதி வழங்காமல் முடக்கப்பட்டுள்ளது.
எனவே ஊராட்சி மன்ற தலைவர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதமாக ஊராட்சிகளுக்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. அந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது கூட்டமைப்பின் மாவட்ட செயலாளர் சதா பாஸ்கரன், மாவட்ட பொருளாளர் சிட்டி கிருஷ்ணம்ம நாயுடு, மாநில செயற்குழு உறுப்பினர் கோவர்தனன், மாவட்ட துணைத்தலைவர்கள் ரமணி சீனிவாசன், சத்யநாராயணன், மாவட்ட துணை செயலாளர்கள் அருள் முருகன், புவனேஸ்வரி ரவி, மாவட்ட இணை செயலாளர் சுகந்தி ராணி லிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story