சீர்காழியில், தடை செய்யப்பட்ட 46 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது
சீர்காழியில் தடை செய்யப்பட்ட 46 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில் ஆகிய பகுதிகளில் அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது.
இந்தநிலையில் மாவட்ட தனிப்படை போலீசார் அறிவழகன், பாலச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று மாலை சீர்காழி ெரயில் நிலையம் அருகில் அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு நேரில் சென்று நோட்டமிட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக 3 பேர் அரசமரத்தடியில் சாக்கு மூட்டைகளோடு நின்று கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து போலீஸ் விசாரணை செய்ததில் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் சோழசக்கர நல்லூர், உளுத்து குப்பை வெள்ளாளர் தெருவை சேர்ந்த உபயத்ரகுமான் மகன் ஆசாத்அலி (வயது 27). வைத்தீஸ்வரன் கோவில் வடக்கு வீதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பாபு (44), சீர்காழி தாடாளன் தெற்கு மடவிளாகத்தை சேர்ந்த சங்கரன் மகன் சுப்பிரமணியன் (44) என்பதும், அவர்கள் வைத்திருந்த சாக்கு மூட்டையில் 30 கிலோ ஹான்ஸ், 16 கிலோ கூல்லிப் உள்ளிட்ட அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் வைத்து இருந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து சீர்காழி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசாத்அலி, பாபு, சுப்பிரமணியன் ஆகிய 3 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story