காவேரிப்பட்டணம் அருகே மனைவி அடித்துக்கொலை-முன்னாள் போலீஸ்காரர் கைது
பாரூர் அருகே மனைவியை அடித்துக்கொலை செய்த முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
காவேரிப்பட்டணம்:
பாரூர் அருகே மனைவியை அடித்துக்கொலை செய்த முன்னாள் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
முன்னாள் போலீஸ்காரர்
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் அருகே உள்ள வாடமங்கலத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 57), முன்னாள் போலீஸ்காரர். தர்மபுரி மாவட்டம் ஏரியூர் போலீஸ் நிலையம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் பணியாற்றிவர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இவருக்கு திருமணம் ஆகி முதல் மனைவி மாது கடந்த 2001-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து மகேஸ்வரன், இந்திரா காந்தி (40) என்பவரை கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
அடித்துக்கொலை
இந்த நிலையில் மகேஸ்வரனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து தனது 2-வது மனைவி இந்திராகாந்தியுடன் தகராறு செய்து வந்தார். மேலும் மனைவியை சந்தேகப்பட்டு அடிக்கடி அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி இரவு மகேஸ்வரன் குடிபோதையில் வழக்கம் போல் தனது மனைவியுடன் தகராறு செய்தார். இதில் ஆத்திரம் அடைந்த அவர் இரும்பு கம்பியால் இந்திரா காந்தியை சரமாரியாக அடித்தார்.
இதை தடுக்க சென்ற அவரது மகன் சுந்தரேசனையும் தாக்கினார். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இந்திரா காந்தி நேற்று முன்தினம் இறந்தார்.
கைது
இது குறித்து அவரது மகன் சுந்தரேசன் கொடுத்த புகாரின் பேரில் பாரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி வழக்குப்பதிவு செய்து, மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்த மகேஸ்வரனை நேற்று கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
தாக்குதலில் காயம் அடைந்த சுந்தரேசனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக பாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story