அரூர் பகுதியில், ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 9 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்- வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை


அரூர் பகுதியில், ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட  9 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல்- வட்டார போக்குவரத்து அதிகாரி நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2021 10:08 PM IST (Updated: 12 Aug 2021 10:08 PM IST)
t-max-icont-min-icon

அரூர் பகுதியில் ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 9 பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தர்மபுரி:
அரூர் பகுதியில் ஆண்டு வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட 9 பொக்லைன் எந்திரங்களை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரி தாமோதரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஆண்டு வரி
தமிழகம் முழுவதும் பொக்லைன்., கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் போன்ற போக்குவரத்து அல்லாத வாகனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அபராதமின்றி ஆண்டு வரி செலுத்த கடைசி நாளாக ஏப்ரல் மாதம் 10-ந் தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வாகனங்கள் விதிமுறைகளை மீறி வரி செலுத்தாமல் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. 
தர்மபுரி மாவட்டத்தில் இதுபோன்ற வாகனங்கள் பல்வேறு பகுதிகளில் இயக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் திவ்யதர்சினி உத்தரவின் பேரில் தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் மற்றும் அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் அரூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வரி செலுத்தாமல் விதிகளை மீறி இயக்கப்பட்ட 9 பொக்லைன் எந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து அரசுக்கு வர வேண்டிய வரி ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 900 மற்றும் இணக்க கட்டணம் ரூ.12 ஆயிரத்து 200 வசூலிக்கப்பட்ட பின் அந்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
எச்சரிக்கை
இதுதொடர்பாக தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன் கூறும் போது,‘தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொக்லைன், கிரேன், டிராக்டர், கம்பரசர் மற்றும் ரிக் வாகன உரிமையாளர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய உரிய நிலுவை வரியை உடனடியாக செலுத்த வேண்டும். அவ்வாறு வரி செலுத்தாமல் இயக்கப்படும் வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Next Story