முதுமலையில் யானைகள் தின விழா


முதுமலையில் யானைகள் தின விழா
x
தினத்தந்தி 12 Aug 2021 10:36 PM IST (Updated: 12 Aug 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

முதுமலையில் யானைகள் தின விழா நடைபெற்றது. அங்கு வளர்ப்பு யானைகளுக்கு குழந்தைகள் உணவு வழங்கினர்.

கூடலூர்,

உலக யானைகள் தினம், ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதுமலை புலிகள் காப்பகத்தில் நேற்று காலை 9 மணிக்கு உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதற்காக தெப்பக்காடு, அபயாரண்யம் முகாம்களில் உள்ள வில்சன், உதயன், சங்கர், பொம்மன், வசிம் உள்ளிட்ட 28 வளர்ப்பு யானைகள் மாயார் ஆற்றுக்கு அழைத்து செல்லப்பட்டு, பாகன்களால் குளிப்பாட்டப்பட்டன.

முன்னதாக யானைகளுக்கு சிறப்பு உணவாக ராகி, கேழ்வரகு கொண்ட ஊட்டச்சத்து உணவு, சர்க்கரை பொங்கல், கரும்பு, மாதுளை, அன்னாசி, பலா, வாழை போன்றவை தயார் செய்து வைக்கப்பட்டு இருந்தது.

பின்னர் முகாம்களில் யானைகள் சமூக இடைவெளியை பின்பற்றி அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டன. தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக பகுதியில் வசிக்கக்கூடிய குழந்தைகள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் யானைகளால் மனிதர்களுக்கு கிடைக்கும் நன்மைகள், காடுகளின் பெருக்கம் குறித்து அவர்களுக்கு, வனத்துறையினர் விளக்கினர்.

தொடர்ந்து வனச்சரகர் தயானந்தன் தலைமையிலான வனத்துறையினர் யானைகளுக்கு சிறப்பு உணவுகளை வழங்கி விழாவை தொடங்கி வைத்தனர். மேலும் குழந்தைகளும் யானைகளுக்கு சிறப்பு உணவுகளை வழங்கினர். இந்த விழாவில்  வனச்சரகர்கள் மனோஜ், விஜயன், சிவகுமார் உள்பட வனத்துறையினர், குழந்தைகள் கலந்து கொண்டனர்.

சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகளுடன் யானைகள் தின விழா கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் இன்றி யானைகள் தின விழா நடைபெற்றது. கடந்த ஆண்டும் இதே நிலைதான் நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story