ஆம்பூரில் மருத்துவமனைக்கு எதிர்ப்பு, போலீஸ் குவிப்பு


ஆம்பூரில் மருத்துவமனைக்கு எதிர்ப்பு, போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 10:48 PM IST (Updated: 12 Aug 2021 10:48 PM IST)
t-max-icont-min-icon

மருத்துவமனைக்கு எதிர்ப்பு, போலீஸ் குவிப்பு

ஆம்பூர்

ஆம்பூர் பஜார் பகுதியில் உள்ள சுயம்பு நாகநாதசுவாமி கோவில் மாட வீதியில் புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் யாராவது இறந்தால் கோவில் நடை சாத்தப்பட்ட வேண்டிய நிலை உள்ளது. மேலும் கோவிலில் விழாக்கள் நடைபெறும்போது கூட்டம் அதிகமாகக் கூடும் அப்போது மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து செல்வதில் சிரமம் ஏற்படும்.

அதனால் அங்கு மருத்துவமனை இயங்க கூடாது என ஆம்பூரில் உள்ள அனைத்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதனடிப்படையில் ஆம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்கரவர்த்தி மற்றும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன் ஆகியோர் கோவில், மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

 இதைத் தொடர்ந்து நேற்று முதல்  அந்தப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் தலைமையில் ஆம்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இதையடுத்து அர்ஜூன்சம்பத் திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹாவை சந்தித்து கோவில் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியை இடமாற்றம் செய்ய வேண்டும், இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் மீது போடப்பட்டுள்ள வழக்கை வாபஸ் பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார். 


Next Story