தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை


தலைமை ஆசிரியர்களுடன் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 12 Aug 2021 11:02 PM IST (Updated: 12 Aug 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி தலைமை ஆசிரியர்களுடன் கலவித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

திண்டுக்கல்: 


பள்ளிகள் திறப்பு 
தமிழகத்தில் கொரோனா பரவலால் கடந்த 1½ ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்பு மட்டுமே நடந்தது. மேலும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த கல்வி ஆண்டிலும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டு, ஆன்லைனில் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா தொற்று குறைந்துள்ளது. எனவே முதல்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு மட்டும் வகுப்புகளை நடத்தும் வகையில் பள்ளிகளை திறக்க ஆலோசிக்கப்பட்டது. அதன்படி வருகிற 1-ந்தேதி முதல் பள்ளிகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆலோசனைக் கூட்டம்
இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளிகளை திறப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம், திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலைநாடார் நினைவு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. 

இதற்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் அதிராமசுப்பு, பாண்டித்துரை, கீதா, திருநாவுக்கரசு, நேர்முக உதவியாளர்கள் சுரேஷ், கிருஷ்ணன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


இதில் பள்ளிகளில் வகுப்பறைகள், கழிப்பறைகள் உள்ளிட்டவற்றை முறையாக பராமரித்து தூய்மையாக வைக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிக்க வேண்டும். மாணவ-மாணவிகளை சுழற்சி முறையில் வகுப்புக்கு அழைக்க வேண்டும். மேலும் அவர்கள் முககவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடித்து அமர வேண்டும். இதற்கு போதிய இடைவெளி விட்டு நாற்காலிகளை அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

Next Story