டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்கள் கொள்ளை
சாக்கு பையால் உடலை மறைத்தபடி டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
ஆரல்வாய்மொழி:
சாக்கு பையால் உடலை மறைத்தபடி டாஸ்மாக் கடையில் பணம், மதுபாட்டில்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
டாஸ்மாக் கடை
குமரி மாவட்டம் தாழக்குடி அருகே சந்தைவிளை பகுதியில் ஆற்றங்கரையோரம் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் மேற்பார்வையாளராக சந்தைவிளையை சேர்ந்த குமார் என்பவரும், விற்பனையாளராக ராஜேஷ், சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரும் பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வழக்கம் போல் வியாபாரம் முடிந்து அனைவரும் கடையை பூட்டி விட்டு சென்றனர்.
கொள்ளை
இந்தநிலையில் நேற்று காலை குமார் டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுபற்றி டாஸ்மாக் உயர் அதிகாரிகளுக்கும், ஆரல்வாய்மொழி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார், டாஸ்மாக் துணை மேலாளர் நந்தகுமார் ஆகியோர் கடைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது கடையின் வெளியே மற்றும் உள் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. ஒரு கேமரா சகதியால் பூசப்பட்டிருந்தது. மேலும், கடையின் மேஜையில் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் 11 மது பாட்டில்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. விற்பனை செய்த ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்தை மேற்பார்வையாளர் இரவு வீட்டுக்கு எடுத்துச் சென்றதால் அந்த பணம் தப்பியது. நள்ளிரவில் மர்ம நபர்கள் டாஸ்மாக் கடையில் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது தெரிய வந்தது.
2-வது முறை
பின்னர், இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் கொள்ளையா்களின் உருவம் பதிவாகி இருந்தது.
மேலும், மர்மநபர் ஒருவர் சாக்கு பையால் உடலை மறைத்தபடி சென்று கைவரிசை காட்டும் காட்சிகள் பதிவாகியது. மற்றொரு நபரின் உருவம் ஓரளவு தெரிகிறது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதே கடையில் கடந்த 2019 மார்ச் மாதம் ரூ.70 ஆயிரம் மற்றும் மது பாட்டில்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story