தீக்குளிக்க முயன்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காதல் கணவர் கைது அறந்தாங்கி கிளை சிறையில் அடைப்பு
தீக்குளிக்க முயன்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படிடையில் காதல் கணவர் கைது செய்யப்பட்டு அறந்தாங்கி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆலங்குடி:
காதல் திருமணம்
ஆலங்குடி அருகே தவளப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெனிபர் பிரியங்கா (வயது21). அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆல்பர்ட் ஸ்டாலின் (40). இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் காதலித்த பின் திருமணம் செய்யாமல் ஆல்பர்ட் ஸ்டாலின் ஏமாற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜெனிபர் பிரியங்கா புகார் கொடுத்த போது, இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின் இருவரும் திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜெனிபர் பிரியங்காவை, ஆல்பர்ட் ஸ்டாலின் பிரிந்து சென்றார். மேலும் கணவரது குடும்பத்தினரும் ஜெனிபர் பிரியாங்காவை மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
கணவர் சிறையில் அடைப்பு
இந்த நிலையில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஜெனிபர் பிரியங்கா மண்எண்ணெய் கேனுடன் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். பின்னர் புதுக்கோட்டை போலீசார் ஜெனிபர் பிரியங்காவை ஆலங்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து, இன்ஸ்பெக்டர் ஹேமலதாவை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இன்ஸ்பெக்டர் ஹேமலதா, மேலும் விசாரணை செய்து அவர் கூறிய புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, ஆல்பர்ட் ஸ்டாலினை கைது செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி நல்லகண்ணன் ஆல்பர்ட் ஸ்டாலினை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை அறந்தாங்கி கிளை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story