பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் 2 கார்களுக்கு தீ வைப்பு


பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் 2 கார்களுக்கு தீ வைப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 2:45 AM IST (Updated: 13 Aug 2021 2:45 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சதீஸ் ரெட்டி தனது வீட்டு வளாகத்தில் நிறுத்தி இருந்த 2 கார்களை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் பா.ஜனதா எம்.எல்.ஏ. சதீஸ் ரெட்டி தனது வீட்டு வளாகத்தில் நிறுத்தி இருந்த 2 கார்களை மர்மநபர்கள் தீ வைத்து எரித்தனர். தலைமறைவான மர்மநபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதா எம்.எல்.ஏ.

பெங்களூரு பொம்மனஹள்ளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் சதீஸ் ரெட்டி. இவர், பொம்மனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹொங்கசந்திராவில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். சதீஸ் ரெட்டி எம்.எல்.ஏ.விடம் 2 சொகுசு கார்கள் உள்ளன. அதில், ஒன்று ஜீப் கார் ஆகும். நேற்று முன்தினம் இரவு தன்னுடைய வீட்டு வளாகத்தில் 2 கார்களையும் சதீஸ் ரெட்டியின் டிரைவர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். 

இரவில் சாப்பிட்டுவிட்டு தனது குடும்பத்தினருடன் சதீஸ் ரெட்டி எம்.எல்.ஏ.வும் தூங்கி விட்டார். இந்த நிலையில், நள்ளிரவில் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், 2 கார்கள் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தனர். இதில், 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தது. உடனே அங்கிருந்து மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டார்கள். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் கார்களின் டயர்கள் பலத்த சத்தத்துடன் வெடித்தது.

2 கார்கள் எரிந்து நாசம்

இதனால் ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்த சதீஸ் ரெட்டி, அவரது குடும்பத்தினர் திடுக்கிட்டு எழுந்தனர். வீட்டு கதவை திறந்து பார்த்த போது 2 கார்களும் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிா்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள், தீயை அணைக்க முயன்றனர். தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பொம்மனஹள்ளி போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து கார்களில் பிடித்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தனர்.

பின்னர் சிறிது நேரத்தில் 2 கார்களில் பிடித்து எரிந்த தீயும் முற்றிலும் அணைக்கப்பட்டது. ஆனாலும் 2 கார்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் திட்டமிட்டே எம்.எல்.ஏ.வின் கார்களுக்கு தீவைத்து விட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் போலீஸ் கமிஷனர் கமல்பந்த், கிழக்கு மண்டல சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன், துணை போலீஸ் கமிஷனர் ஸ்ரீநாத் ஜோஷி விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

மந்திரி உத்தரவு

மேலும் எம்.எல்.ஏ. சதீஸ் ரெட்டியிடமும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்தது குறித்தும், யார் மீது சந்தேகம் உள்ளது, என்ன காரணத்திற்காக மர்மநபர்கள் தீவைத்திருப்பார்கள் உள்ளிட்டவை குறித்து கேட்டு அறிந்து கொண்டனர். குறிப்பாக அரசியல் பிரச்சினை காரணமா?, அல்லது சொந்த பிரச்சினை காரணமா? என்பது குறித்தும் சதீஸ் ரெட்டியிடம் போலீஸ் அதிகாரிகள் கேட்டு தகவல்களை பெற்றுக் கொண்டார்கள்.

மேலும் நேற்று காலையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவும், சதீஸ் ரெட்டியின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டு அறிந்து கொண்ட அவர், மர்மநபர்களை உடனடியாக கைது செய்யும்படி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில், சதீஸ் ரெட்டி எம்.எல்.ஏ.வின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தார்கள்.

3 மர்மநபர்கள் கைவரிசை

அப்போது சதீஸ் ரெட்டியின் வீட்டுக்குள் இருந்து 2 வாலிபர்கள் தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அந்த 2 மர்மநபர்கள் தான் அவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே புகுந்து வீடு முன்பாக நின்ற 2 கார்களின் மீதும் பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. மர்மநபர்கள் பின்பக்க நுழைவு வாயில் வழியாக சதீஸ் ரெட்டியின் வீட்டுக்குள் புகுந்ததும், கண்காணிப்பு கேமராவில் உருவம் தெரியாமல் இருக்கும்படியாக முன்பக்கத்திற்கு வந்துள்ளனர்.

ஆனாலும் கண்காணிப்பு கேமராவில் 2 மர்மநபர்களின் உருவம் பதிவாகி இருந்தாலும், தெளிவாக இல்லாமல் இருப்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் அப்பகுதியில் உள்ள மற்ற கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது காம்பவுண்டு சுவர் அருகே நின்று மற்றொரு நபர் ஓடுவதும் தெரியவந்துள்ளது. இதன்மூலம் சதீஸ் ரெட்டி எம்.எல்.ஏ.வின் கார்களுக்கு தீவைத்தது 3 பேர் என்பதை போலீசார் உறுதி செய்து கொண்டுள்ளனர்.

பேகூர் ஏரியில் சிலை...

இதற்கிடையில், சதீஸ் ரெட்டிக்கு சொந்தமான கார்களுக்கு அரசியல் காரணங்களுக்காக மர்மநபர்கள் தீவைத்து இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் பொம்மனஹள்ளி அருகே பேகூர் ஏரிப்பகுதியில் ஒரு சிவன் சிலை வைக்கப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த சிவன் சிலையை திறக்க ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு இருந்தது.

இதன் காரணமாக மாநகராட்சி அதிகாரிகள், பேகூர் ஏரிக்கரையில் அமைந்துள்ள சிவன் சிலையை மூடி வைத்திருந்தனர். இந்த நிலையில் இந்து அமைப்பு சேர்ந்தவர்கள் நேற்று சிலையின் மீது போட்டு இருந்த பிளாஸ்டிக் கவரை அகற்றி இருந்தனர். இதுதொடர்பாக 2 தரப்பினர் இடையே நேற்று முன்தினம் சண்டை ஏற்பட்டு இருந்தது. தகராறில் ஈடுபட்ட சதீஸ் ரெட்டியின் ஆதரவாளர்கள் 9 பேர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாகவும் சதீஸ் ரெட்டிக்கு சொந்தமான காருக்கு தீவைத்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

5 தனிப்படைகள் அமைப்பு

இதையடுத்து, மர்மநபர்களை பிடிக்க கிழக்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் முருகன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் மர்மநபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறார்கள். இதுகுறித்து பொம்மனஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பா.ஜனதா எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான கார்களுக்கு தீவைத்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

100 கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு

பா.ஜனதா எம்.எல்.ஏ. சதீஸ் ரெட்டிக்கு சொந்தமான 2 கார்களுக்கு மர்மநபர்கள் தீவைத்து எரித்திருந்தனர். அவரது வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்த போது 2 மா்மநபர்களின் உருவம் சரியாக தெரியாமல் இருந்தது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தார்கள். 
அப்போது சதீஸ் ரெட்டியின் வீட்டில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்தே வந்து, கார்களுக்கு தீ வைத்துவிட்டு சென்றது தெரியந்துள்ளது. 100-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் மர்மநபர்கள் பற்றிய முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Next Story