லிங்கனமக்கி அணை நிரம்ப இன்னும் 7 அடிகளே பாக்கி


லிங்கனமக்கி அணை நிரம்ப இன்னும் 7 அடிகளே பாக்கி
x
தினத்தந்தி 13 Aug 2021 2:46 AM IST (Updated: 13 Aug 2021 2:46 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக லிங்கனமக்கி அணை நிரம்ப இன்னும் 7 அடிகளே பாக்கி உள்ளது.

சிவமொக்கா: நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக லிங்கனமக்கி அணை நிரம்ப இன்னும் 7 அடிகளே பாக்கி உள்ளது. 

லிங்கனமக்கி அணை

மலைநாடு என்று வர்ணிக்கப்படும் சிவமொக்கா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சாகர் தாலுகாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு உள்ள ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் சாகர் அருகே உள்ள லிங்கனமக்கி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. 

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. கடல்மட்டத்தில் இருந்து 1,819 அடி உயர நீர்மட்ட கொள்ளளவு கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 1,812 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 11 ஆயிரத்து 174 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனால் இன்னும் அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

7 அடிகளே பாக்கி

இதுகுறித்து அணையின் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நிருபர்களிடம் கூறும்போது, லிங்கனமக்கி அணை நிரம்ப இன்னும் 7 அடிகளே பாக்கி உள்ளது. அணை தற்போது 85 சதவீதம் நிரம்பி உள்ளது. அணைக்கு இன்று(நேற்று)வினாடிக்கு 11,174 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி விரைவில் தண்ணீர் திறந்து விட உள்ளோம். அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் லிங்கனமக்கி ஆற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளோம் என்றனர்.

Next Story