மேகதாது திட்டத்தை தடுக்க தமிழகத்திற்கு அதிகாரம் இல்லை; சித்தராமையா பேட்டி
மேகதாது திட்டத்தை தடுக்க தமிழகத்திற்கு அதிகாரம் இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு: மேகதாது திட்டத்தை தடுக்க தமிழகத்திற்கு அதிகாரம் இல்லை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
உறுதிமொழி ஏற்க வேண்டும்
நான் இன்று (நேற்று) 75-வது வயதை தொடுகிறேன். நான் எப்போதும் பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை. எனது ஆதரவாளர்கள், கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இந்த நேரத்தில் கடந்த 74 ஆண்டுகள் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டும். நாட்டில் முக்கியமான நாட்களை நாம், சமூக-பொருளாதார மாற்றங்களை ஏற்படுத்த உறுதிமொழி ஏற்க வேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டாடுகிறோம்.
நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் சுயநலத்தை பார்க்கவில்லை. ஆங்கிலேயர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்திற்காக அவர்கள் போராடினார்கள். நாம் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் அல்ல. ஆனால் அந்த சுதந்திரத்தால் கிடைத்த பயனை அனுபவித்து கொண்டிருக்கிறோம். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 18 மாதங்கள் உள்ளன. பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் மக்கள் வெறுப்பில் உள்ளனர்.
வெள்ள நிவாரண பணிகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதிலும், வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதிலும் இந்த அரசு தோல்வி அடைந்துவிட்டது. கொரோனாவால் நாட்டில் 50 லட்சம் பேர் இறந்திருப்பார்கள். கர்நாடகத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருக்கும். ஆனால் மாநில அரசு இறப்புகளை குறைத்து காட்டுகிறது. காங்கிரசார் நேரு பெயரில் ஹுக்கா பார் திறக்கட்டும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறியுள்ளார். நாங்கள் பா.ஜனதா தலைவர்களின் பெயர்களில் உள்ள திட்டங்களை அவ்வாறு கூறினால் அது சரியாக இருக்குமா?.
நேரு குடும்பம் நாட்டிற்காக தியாகங்களை செய்துள்ளது. பா.ஜனதாவில் முக்கியமான பொறுப்பில் இருக்கும் சி.டி.ரவி கண்ணியமாக பேச வேண்டும். கலாசாரத்தை மறந்து பேசக்கூடாது. தனது தொகுதிக்கு நிதி ஒதுக்கவில்லை என்று ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரே போராடுகிறார். காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ.க்களின் நிலை என்ன என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள்.
அதிகாரம் இல்லை
மேகதாது திட்டம் கர்நாடகத்தின் உரிமை. அதை தடுக்கும் அதிகாரம் தமிழ்நாட்டிற்கோ அல்லது கேரளாவுக்கோ இல்லை. கர்நாடகத்தின் நலன்களில் அக்கறை இருந்தால் சி.டி.ரவி, மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று தர வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Related Tags :
Next Story