நாகர்கோவிலில் நத்தை வேகத்தில் சாலை சீரமைப்பு பணிகள்


நாகர்கோவிலில் நத்தை வேகத்தில் சாலை சீரமைப்பு பணிகள்
x
தினத்தந்தி 13 Aug 2021 3:33 AM IST (Updated: 13 Aug 2021 3:33 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் மாநகராட்சியில் 8 ஆண்டுகள் கடந்த பிறகும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது. நத்தை வேகத்தில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணியால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சியில் 8 ஆண்டுகள் கடந்த பிறகும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நிறைவடையாமல் உள்ளது. நத்தை வேகத்தில் நடைபெறும் சாலை சீரமைப்பு பணியால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். 
பாதாள சாக்கடை பணி
நாகர்கோவில் நகரம் நகராட்சியாக இருந்தபோது அதாவது கடந்த 2013-ம் ஆண்டு பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. இந்தபணிகள் நாகர்கோவில் நகரில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் 18 வார்டுகளில் முழுமையாகவும், 17 வார்டுகளில் பகுதியாகவும் நடைபெறுகிறது. முதலில் ரூ.76 கோடியே 4 லட்சத்தில் அமைக்க திட்டமிடப்பட்ட இந்த பணி, பின்னர் திட்ட மதிப்பீடு ரூ.110 கோடியாக உயர்த்தப்பட்டது.
வீடுகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை குழாய்கள் மூலம் பறக்கிங்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து, அதனை தெங்கம்புதூர் பாசனக் கால்வாய் வழியாக பாசனத்துக்கு பயன்படுத்துவது என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்.
விக்ரமாதித்தன் கதைபோல...
தொடக்கத்தில் இந்த திட்டத்தை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுத்தான் பணியை தொடங்கினார்கள். ஆனால் இந்தப்பணி விக்ரமாதித்தன் கதைபோல நீண்டு கொண்டே இருக்கிறது. 
இந்த பணியை பொறுத்தவரையில் ‘நடந்தது... நடக்கிறது... இன்னும் நடக்கும்...’ என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி இந்த பணிக்கு 8-வது ஆண்டு விழாவாகும். 9-வது ஆண்டு தொடங்கிய நிலையிலும் இன்னும் இந்த பணிகள் நிறைவடையாததுதான் வேதனையிலும் வேதனையாகும். இதற்கிடையே நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு விட்டது.
ஆனால் நாகர்கோவில் நகரம் நாளுக்கு நாள் ஊராட்சி பகுதிகளைவிட மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு கொண்டிருப்பதுதான் நிதர்சனமான உண்மை.
மோசமான சாலைகள்
குமரி மாவட்டத்தில் பெருமளவு வாகனங்கள் நாகர்கோவில் நகருக்குள்தான் இயக்கப்படுகின்றன. இங்கு உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், தெருச்சாலைகளை காண்பவர்கள் ஊராட்சி தரத்துக்குகூட மதிக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கின்றன. 
இதற்கு காரணம் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் ஆமை வேகத்தில் இருந்து நத்தை வேகத்துக்கு சென்றுள்ளதுதான். அதனுடன் புத்தன் அணை குடிநீர் திட்டப் பணிக்கு குழாய்கள் பதிக்கும் பணி சாலைகள், தெருக்கள் அனைத்திலும் நடைபெற்று வருகிறது. இரண்டு பணிகளையும் குடிநீர் வடிகால் வாரியத்தினர் மேற்கொண்டு வருகிறார்கள். பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக சாலையின் ஒருபுறம் தோண்டினால் மற்றொரு புறத்தில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டுகிறார்கள். இதனால் நாகர்கோவில் நகரில் இந்தப் பணிகள் நடைபெறும் சாலைகள், தெருக்கள் மாறி, மாறி தோண்டப்பட்டு அனைத்து சாலைகளும் புழுதி பறக்கும் மண் சாலைகளாகவும், மேடு, பள்ளங்களும், மரணக்குழிகளும் நிறைந்ததாகவும் காட்சி தருகின்றன.
விபத்துகள்
இந்த பணிகள் முடிவடைந்த பகுதிகளில் சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் மாநகராட்சி நிர்வாகம் சுணக்கம் காட்டுகிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள்,  வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் நாள்தோறும் படும் அவஸ்தைகள் சொல்லி மாளாது.
சீரமைக்கப்படாத சாலைகளில் பறக்கும் புழுதிகளாலும், மேடு- பள்ளங்களில் வாகனங்களின் சக்கரங்கள் புதைவதாலும், மழை நேரங்களில் மேடு எது? பள்ளம் எது? என தெரியாமல் மரணக்குழிகளால் ஏற்படும் விபத்துகளாலும் தினந்தோறும் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.  
வேதனை
உதாரணமாக நாகர்கோவில் கோட்டார் போலீஸ் நிலையத்தில் இருந்து மீனாட்சிபுரம் செல்லும் சாலை, ஒழுகினசேரியில் இருந்து வடசேரி செல்லும் சாலை, வடசேரியில் இருந்து வெட்டூர்ணிமடம் செல்லும் சாலை, வடசேரி அண்ணா சிலையில் இருந்து மீன் சந்தை வரையிலான சாலை, கோட்டார் சவேரியார் ஆலய சந்திப்பு முதல் செட்டிகுளம் சந்திப்பு வரையிலான சாலை, இந்துக் கல்லூரி முதல் பீச்ரோடு சந்திப்பு வரையிலான சாலை, ஈத்தாமொழி ரோடு சந்திப்பு முதல் பறக்கை ரோடு சந்திப்பு வரையிலான தேசிய நெடுஞ்சாலை, ராமன்புதூர் சந்திப்பு முதல் ஆயுதப்படை முகாம் வரையிலான சாலை, டி.வி.டி. காலனி ரோடு, மத்தியாஸ் சந்திப்பு முதல் பால்பண்ணை சந்திப்பு வரையிலான சாலை, சற்குண வீதி ரோடு, மேலராமன்புதூர் சந்திப்பு முதல் சைமன் நகர் வரையிலான சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் குண்டும், குழியுமாகவும், மரண பள்ளங்களாகவும், புழுதி பறக்கும் சாலைகளாகவும் காட்சி அளிக்கின்றன. இதை எதையும் அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருப்பது வேதனையிலும் வேதனையாகும்.
தற்போது நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் இருந்து பால்பண்ணை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. 20 நாட்களில் பணிகள் முடிக்கப்பட்டு, இருவழிப்பாதையாக மாற்றப்படும் என்று போலீசார் அறிவித்திருந்தனர். ஆனால் 1 மாதமான பிறகும் சாலை சீரமைப்பு பணி நிறைவடையவில்லை. இதேபோல் ஈத்தாமொழி ரோடு சந்திப்பு முதல் பறக்கை சந்திப்பு வரையிலான சாலை, மீனாட்சிபுரம் சாலை உள்ளிட்ட சாலைகளிலும் சீரமைப்பு பணிகள் நிறைவடையாமல் உள்ளது. 
உருண்டோடும் ஆண்டுகள்
கடைகளுக்கும், சாலைகளுக்கும் இடையே தோண்டப்படுவதால் அந்த பள்ளங்களை தாண்டி கடைகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதனால் கடைகளில் வியாபாரம் பாதிக்கப்படுகிறது என்று வியாபாரிகள் கூறுகிறார்கள். 
 8 ஆண்டுகள் கடந்த பின்பும் பாதாள சாக்கடைத் திட்டப்பணியில் ஏற்பட்டுள்ள சுணக்கத்துக்கு காரணம் என்ன? என்பதுதான் புரியாத புதிராக உள்ளது. அதிகாரிகள் மவுனத்தை கலைத்து, செயலில் வேகத்தை காட்டினால்தான் நிறைவடையாத பணிகள் நிறைவுக்கு வரும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் பாதாள சாக்கடைத்திட்டப் பணியை நிறைவு செய்வோம் என்றார்கள். ஆனால் நிறைவடைய வில்லை. இந்த ஆண்டும் டிசம்பர் மாதத்துக்குள் முடிப்போம் என்கிறார்கள். இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் உருண்டோடிக் கொண்டிருக்கிறது. ஆனால் பணிகள்தான் முடிவுக்கு வரவில்லை.

Next Story