5 பவுன் நகைக்காக மூதாட்டி வெட்டிக்கொலை
அயோத்திப்பட்டணம் அருகே 5 பவுன் நகைக்காக மூதாட்டியை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அயோத்தியாப்பட்டணம், ஆக.13-
அயோத்திப்பட்டணம் அருகே 5 பவுன் நகைக்காக மூதாட்டியை வெட்டிக்கொன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியாக வசித்து வந்த மூதாட்டி
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள காரிப்பட்டி ராஜீவ் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன். இவருடைய மனைவி அலமேலு (வயது 64). இவர்களது மகள் கவிதா (42).
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மேகநாதன் இறந்து விட்டார். இதனால் அலமேலு அங்கு தென்னந்தோப்பில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார். கவிதாவுக்கு திருமணம் ஆனதால், அவர் அயோத்தியாப்பட்டணம் பகுதியில் வசித்து வருகிறார். தினமும் கவிதா தனது அம்மா வீட்டுக்கு வந்து விவசாயம் பார்த்துவிட்டு, வீட்டில் இருக்கும் வேலையை முடித்துவிட்டு செல்வது வழக்கம்.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் அலமேலுவை பார்க்க அவரது மகள் கவிதா வந்துள்ளார். அப்போது வீடு பூட்டி இருந்தது. இதனால் அம்மா வெளியில் சென்றதாக நினைத்து, அவரிடம் இருந்த மற்றொரு சாவியை பயன்படுத்தி கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் அலமேலு கீழே பிணமாக கிடந்துள்ளார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்து கவிதா அலறித்துடித்தார்.
இந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். மேலும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
5 பவுன் நகைக்காக....
முதற்கட்ட விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள், வீட்டில் அலமேலு தனியாக இருப்பதை அறிந்து வந்துள்ளனர். பின்னர் கத்தி அல்லது அரிவாள் போன்ற ஆயுதத்தால் அலமேலுவை வெட்டிக்கொலை செய்துள்ளனர். மேலும் அவரது முகத்தை சிதைத்து இருக்கிறார்கள். பின்னர் வீட்டில் இருந்த 5 பவுன் நகையை கொள்ளையடித்து கொண்டு, வீட்டை பூட்டி விட்டு சென்றது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கவிதாவிடம் விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூதாட்டியை கொலை செய்தது யார்? 5 பவுன் நகைகக்காக கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அவரை கொன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த சம்பவம் காரிப்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story