தூத்துக்குடியில் வியாபாரிகள் திடீர் சாலைமறியல்
தூத்துக்குடியில் நேற்று வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வியாபாரிகள் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்மார்ட் சிட்டி திட்டம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன. அதன்படி ஜெயராஜ் ரோட்டில் காங்கிரீட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் நடுவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள காய்கறி மார்க்கெட்டின் உள்ளே வாகனங்கள் செல்வதற்கான பாதை உள்ளது. இந்த பாதையின் அருகே ரோட்டில் தடுப்புச்சுவர் அமைத்தால் வாகனங்கள் மார்க்கெட்டின் உள்ளே திரும்பி செல்ல முடியாத நிலை ஏற்படும். ஆகையால் அந்த பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க கூடாது என்று மார்க்கெட் நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
சாலை மறியல்
நேற்று குறிப்பிட்ட அந்த பகுதியில் சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதனால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன் தலைமையில் வியாபாரிகள் பாளையங்கோட்டை மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் மார்க்கெட் வியாபாரிகள் கடைகளையும் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் ஆகியோர் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீயை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story