கப்பல் கேப்டன் மனைவியின் வங்கி கணக்கில் 20 லட்சம் மோசடி


கப்பல் கேப்டன் மனைவியின் வங்கி கணக்கில் 20 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 13 Aug 2021 7:56 PM IST (Updated: 13 Aug 2021 7:56 PM IST)
t-max-icont-min-icon

கப்பல் கேப்டன் மனைவியின் வங்கி கணக்கில் 20 லட்சம் மோசடி

கோவை

கப்பல் கேப்டன் மனைவியின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை மோசடி செய்த கட்டிட ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது

வங்கி கணக்கு

கோவையை அடுத்த மதுக்கரை மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணதாசன். இவருடைய மனைவி யமுனா (வயது 45). கிருஷ்ண தாசன் நெதர்லாந்து நாட்டில் கப்பலில் கேப்டனாக வேலை பார்த்தார். தற்போது அவர் மீண்டும் கோவை வந்தார்.

இங்கு அவர், தனது மனைவியுடன் சேர்ந்து கட்டுமான ஒப்பந்ததாரராக தொழில் செய்து வருகிறார். 

இதற்காக அவர்கள், குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கூட்டாக வங்கி கணக்கு தொடங்கினர்.
இந்தநிலையில் கிருஷ்ணதாசன் தனது மனைவிக்கு புதிய செல்போன்  வாங்கி கொடுத்தார். 

அதன்மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய வங்கி யின் செல்போன் செயலியை பதிவிறக்கம் செய்ய முயன்றார். ஆனால் அவரால் அதைசரியாக செய்ய முடிய வில்லை என்று தெரிகிறது.

இது பற்றி அவர், தனது கணவரின் நண்பரான வேலாண்டிபாளை யத்தை சேர்ந்த ராம்குமார் (30) என்பவரிடம் கூறி உள்ளார். 

ரூ.20 லட்சம் மோசடி

இதையடுத்து கடந்த மாதம் 29-ந் தேதி ராம்குமார், யமுனாவின் செல்போனை வாங்கி பணபரிவர்த்தனை செய்வதற்கான வங்கியின் செயலியை பதிவிறக்கம் செய்து தருவதாக கூறி உள்ளார். அதை நம்பி யமுனா செல்போனை கொடுத்துள்ளார்.

உடனே, ராம்குமார், செயலியை பதிவிறக்கம் செய்வது போல் நடித்து, யமுனாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சத்தை தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றி மோசடி செய்து உள்ளார். 

ரூ.20 லட்சம் அவரது வங்கிக்கணக்கிற்கு வந்த உடன் எதுவும் தெரியாதது போல் யமுனாவிடம் செல்போனை கொடுத்து விட்டு தப்பி சென்று தலைமறைவானார்.


இந்த நிலையில், தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.20 லட்சம் எடுக்கப்பட்டதை அறிந்து யமுனா அதிர்ச்சி அடைந்தார். 

மேலும் வங்கிக்கு சென்று கணக்கை சரிபார்த்த போது, செல்போன் செயலி மூலம் ராம்குமாரின் வங்கிக்கணக்கிற்கு ரூ.20 லட்சம் மோசடியாக அனுப்பப்பட்டது தெரியவந்தது.

கட்டிட ஒப்பந்ததாரர் கைது

இது குறித்து யமுனா, மதுக்கரை போலீசில் புகார் அளித்தார். ஆனால் இது ஆன்லைன் மூலம் நடந்த குற்றச் சம்பவம் என்பதால் வழக்கு மாவட்ட குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. 

அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ஆறுமுகநயினார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராம்குமாரை நேற்று கைது செய்தார். 

அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. ராம்குமார், கட்டிட ஒப்பந்ததாராக தொழில் செய்து வருகிறார். 

இதையடுத்து அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


Next Story