சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி
திண்டுக்கல் அருகே சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி மோசடி செய்ததாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
திண்டுக்கல்:
கிராம மக்களிடம் சீட்டு
திண்டுக்கல் அருகே உள்ள வக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் சிலர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வக்கம்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்களிடம், அப்பகுதியை சேர்ந்த 2 பேர் சீட்டு நடத்தினர். இதில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை சீட்டு தொகையாக நிர்ணயிக்கப்பட்டது. ஒவ்வொரு சீட்டிலும் குறைந்தபட்சம் 20 பேர் சேர்ந்தனர்.
இதேபோல் ஒவ்வொரு நபரும் ஒன்று முதல் 2 சீட்டுகளில் சேர்ந்து பணம் செலுத்தினர். அந்த வகையில், வக்கம்பட்டி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 150 பேர் சீட்டு பணம் செலுத்தி இருக்கிறோம். இதில் பெரும்பாலானவர்கள் கூலித்தொழிலாளர்கள். தினமும் கிடைக்கும் கூலியில் சேமித்து வைத்து சீட்டு பணம் கட்டினோம்.
ரூ.1¼ கோடி மோசடி
இந்தநிலையில் சீட்டுக்கு உரிய காலம் நிறைவுபெற்றதும் சிலர் பணத்தை கேட்டனர். ஆனால் சீட்டு பணத்தை திரும்ப தரவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள், நேரில் சென்று கேட்டால் சீட்டு நடத்தியவர்கள் முறையான பதில் அளிப்பதில்லை. கடந்த ஓராண்டுக்கு மேலாகியும் சீட்டு பணம் தரவில்லை.
இதனால் சீட்டு பணம் செலுத்திய மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எங்களிடம் சீட்டு நடத்தி ரூ.1¼ கோடி வரை மோசடி செய்யப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதுடன், எங்களின் பணத்தை மீட்டுதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story