மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிபார்ப்பில் உள்ளனர்.
மானூர்:
மானூர் பெரிய குளத்துக்கு தண்ணீர் கொண்டு வர திட்டம் செயல்படுத்தப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
பெரிய குளம்
மானூர் பெரிய குளம், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய குளம் ஆகும். 1,120 ஏக்கர் பரப்பளவும், 190 மில்லியன் கனஅடி தண்ணீர் கொள்ளளவும் கொண்ட இந்த குளம், சராசரி அணைக்கட்டுகளை விட பெரியதாகும். இது மானூர், மாவடி, மதவக்குறிச்சி மற்றும் எட்டான்குளம் ஆகிய 4 வருவாய் கிராமங்களை சேர்ந்த 6 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு நேரடியாக பாசன வசதியை தரக்கூடியது. இக்குளம் பெருகினால், அதனை சுற்றியுள்ள சுமார் 20 கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்றுப்பாசன விவசாயமும் சிறக்கும்.
மேய்ச்சல் காடுபோல்...
இந்த குளத்தின் கால்வாயானது வீரகேரளம்புதூர் தடுப்பணையில் இருந்து மானூர் பெரியகுளம் வரை 33 கி.மீ. நீளம் கொண்டதாகும். மானூர் பெரிய குளத்திற்கு முன் உள்ள 19 குளங்களை நிரப்பிவிட்டு, அதன்பிறகே மானூர் பெரியகுளத்துக்கு தண்ணீர் வரவேண்டி வேண்டி உள்ளது. அதற்குள் மழைக்காலம் முடிந்து, நீர்வரத்து இல்லாமல் போய் விடுகிறது. இதனால் தொடர்ந்து இக்குளம் வறட்சியைச் சந்திக்கிறது. தற்போது இக்குளம், கால்நடைகளுக்கான மேய்ச்சல் காடு போல் காட்சி அளிக்கிறது. மேலும் இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறும்போது, "மழைக்காலங்களில், தாமிரபரணி ஆற்றிலிருந்து பலநூறு டி.எம்.சி. வெள்ளநீர் உபரியாகவும், வீணாகவும் கடலில் சென்று கலக்கிறது. அவ்வாறு வீணாகும் உபரிநீரின் ஒரு பகுதியை மானூர் பெரியகுளத்துக்கு கொண்டு வந்து நிரம்புவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால், இந்த வட்டாரத்தில் உள்ள நிலங்களில் விவசாயம் செழிக்கும். மக்களின் வாழ்வாதாரமும் சிறப்படையும்" என்றனர்.
3 திட்டங்கள்
இதுபற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறும்போது," மானூர் பெரியகுளம் மற்றும் பள்ளமடை குளத்திற்கும் நீர் ஆதாரம் அமையவேண்டி மூன்று வகைகளில் திட்டமிடப்பட்டு உள்ளது.
அதில் முதலாவது திட்டமாக, விக்கிரமசிங்கபுரம் பகுதியில் தாமிரபரணியில் இணையும் கோரையாற்றின் குறுக்கே ஒரு நீர்த்தேக்கம் அமைத்து, அங்கு உயர்மட்ட மதகு மற்றும் கால்வாய் அமைத்து அதன்மூலம் மானூர், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குவது.
இரண்டாவதாக, பாளையங்கோட்டை- திருமலைக்கொழுந்துபுரம் பகுதியில், தாமிரபரணியின் குறுக்கே அமையப்பெற உள்ள கதவணையில் இருந்தோ அல்லது மற்றொன்றான பாளையங்கோட்டை- திருவேங்கடநாதபுரம் பகுதியில், தாமிரபரணியின் குறுக்கே அமையப் பெற உள்ள கதவணையிலிருந்தோ புதிய கால்வாய் அமைத்து நீரேற்றம் மூலம் மானூர், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குவது.
மூன்றாவது திட்டமாக, சேரன்மாதேவி - அரியநாயகிபுரம் பகுதியில் ஏற்கனவே அமைந்துள்ள தடுப்பணையின் மேற்புறம் புதிய கால்வாய் அமைத்து, நீரேற்றம் மூலம் மானூர், பள்ளமடை குளங்களுக்கு தண்ணீர் வழங்குவது.
இந்த 3 திட்டங்கள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
எதிர்பார்ப்பு
தமிழக அரசு இவற்றில் ஏதேனும் ஒரு திட்டத்தை செயல்படுத்தி, மானூர் பெரியகுளத்திற்கு தண்ணீர் வர வழி ஏற்படுத்தி கொடுத்து இப்பகுதி விவசாயிகளின் இன்னல்களை தீர்க்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும எதிர்பார்க்கின்றனர்.
Related Tags :
Next Story