திறப்பு விழா கண்டு 4 மாதத்திலேயே உடைந்த அணைக்கட்டு விரைந்து சீரமைக்கப்படுமா?
தென்பெண்ணையாற்றின் குறுக்கே ரூ.25 கோடியில் கட்டப்பட்டு திறப்பு விழா கண்டு 4 மாதத்திலேயே உடைந்த அணைக்கட்டை விரைந்து சீரமைக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே ஓடும் தென்பெண்ணையாற்றின் குறுக்கே 2 மாவட்ட விவசாயிகளின் 20 ஆண்டுகால கோரிக்கையை ஏற்று புதியதாக அணைக்கட்டு கட்ட கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ரூ.25 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை அமைப்பு) சார்பில் தென்பெண்ணையாற்றின் குறுக்கே புதிய அணைக்கட்டு கட்டும் பணி கடந்த 30.1.2019 அன்று தொடங்கப்பட்டது. இந்த அணைக்கட்டானது 400 மீட்டர் நீளமும், 3.1. மீட்டர் உயரமும் கொண்டதாக கட்டி முடிக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி திறந்து வைக்கப்பட்டது.
2114.14 ஏக்கர் நிலங்கள் பாசனம்
அணைக்கட்டின் இருபுறமும் பக்கத்திற்கு மூன்று மணற்போக்கிககள் வீதம் 6 மணற்போக்கிகளை கொண்டது. இந்த அணைக்கட்டு வினாடிக்கு 1 லட்சத்து 46 ஆயிரத்து 215 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. மேலும் இருபுறங்களிலும் அமையப்பெற்றுள்ள மணற்போக்கிகள் மூலம் வினாடிக்கு 5105 கனஅடி நீர் வெளியேற்றும் திறன் கொண்டது. இங்கு அணைக்கட்டு கட்டப்பட்டதன் மூலம் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் செறிவூட்டப்பட்டு தென்பெண்ணையாற்றின் இரு பகுதிகளில் உள்ள விழுப்புரம் மாவட்டம் தளவானூர், கொங்கரகொண்டான், திருப்பாச்சனூர், வெளியம்பாக்கம், சித்தாத்தூர்திருக்கை, அரசமங்கலம், கள்ளிப்பட்டு, பூவரசன்குப்பம் ஆகிய 8 கிராமங்களும், கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம், காவனூர், உளுந்தம்பட்டு, அவியனூர், கரும்பூர் ஆகிய 5 கிராமங்களும் என மொத்தம் 13 கிராமங்கள் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள 87 திறந்தவெளி கிணறுகள் இந்த அணைக்கட்டால் பயன்பெறும் வகையிலும், அதுமட்டுமின்றி இந்த அணைக்கட்டால் 2114.14 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையிலும் கட்டப்பட்டது. அதேபோல் மலட்டாறு, வாலாஜா கால்வாய் மற்றும் எனதிரிமங்கலம் கால்வாய்களில் தண்ணீர் செல்வதன் மூலம் பாசனம் மேம்படும், நிலத்தடி நீர்மட்டமும் உயரும் வகையில் கட்டப்பட்டது.
இந்த அணைக்கட்டு திறக்கப்பட்டு 2 மாதங்களிலேயே தண்ணீர் வரத்து வந்தது. வடகிழக்கு பருவமழையினாலும் மற்றும் நிவர், புரெவி புயல்களாலும் தொடர்ந்து பெய்த பலத்த மழையினால் அணைக்கட்டு நிரம்பி அதிலிருந்து தண்ணீர் இரு கரைகளையும் தொட்டவாறு ஆர்ப்பரித்து சென்றது. இதனால் விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகள், பொதுமக்கள் பலரும் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் இவர்களின் மகிழ்ச்சி நீண்ட நாள் நீடிக்கவில்லை.
சில மாதங்களிலேயே உடைந்தது
அணைக்கட்டு திறக்கப்பட்டு 4 மாதங்களே ஆன நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அணைக்கட்டு உடைந்து தண்ணீர் வெளியேறியது. எனதிரிமங்கலம் பகுதியில் அணைக்கரை பலமாக போடப்படாததால் கரைப்பகுதியில் உள்புறமாக உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிகளவில் கசிந்து வெளியேறியதோடு 3 ஷட்டர்களும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து வந்து சில வாரங்களிலேயே உடைப்பு ஏற்பட்டதால் 2 மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து அணைக்கட்டு உடைப்பு விவகாரம் தொடர்பாக பொதுப்பணித்துறை சென்னை மண்டல தலைமை பொறியாளர் (நீர்வள ஆதாரம்), கண்காணிப்பு பொறியாளர், விழுப்புரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், 2 உதவி பொறியாளர்கள் என 6 பேர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டனர்.
எப்போது சீரமைக்கப்படும்?
இதையடுத்து உடைப்பு ஏற்பட்ட அணைக்கட்டை பார்வையிட்ட அப்போதைய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த அணைக்கட்டை சீரமைக்க மேலும் ரூ.7 கோடி கேட்டு அரசுக்கு கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஆனால் இதுநாள் வரையிலும் அணைக்கட்டு சீரமைக்கப்படாமல் தற்போது வரை அதே நிலைமையிலேயே உள்ளது. இதனிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ஏற்கனவே ரூ.7 கோடி கேட்டு அரசுக்கு அனுப்பிய கோப்பு என்னவாயிற்று, எப்போது அணைக்கட்டு சீரமைக்கப்படும் என்று 2 மாவட்ட விவசாயிகளும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இனியும் அணைக்கட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிடில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின்போது கிடைக்கும் தண்ணீரை அணைக்கட்டில் சேமித்து வைக்க முடியாமல் அந்த தண்ணீர் வீணாக கடலில் கலக்கும் நிலை உள்ளது. எனவே புதியதாக பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு, விழுப்புரம்- கடலூர் மாவட்ட விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் இந்த அணைக்கட்டை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story