அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர், விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
செஞ்சி,
செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் திடீரென சென்றார். அப்போது அங்கு நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருந்தனர். அவர்களிடம் கலெக்டர் மோகன் குறைகளை கேட்டார்.
அப்போது விவசாயிகள் கூறுகையில், 4 மாதம் விளை நிலத்தில் கஷ்டப்பட்டு உழைத்ததால் கிடைத்த பயன்தான் இந்த நெல் மூட்டைகள். இதனை அறுவடை செய்து இங்கு கொண்டு வந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஆனால் நெல் கொள்முதல் செய்யவில்லை. இரவு, பகலாக இங்கேயே இருந்து நெல் மூட்டைகளை பாதுகாத்து வருகிறோம். அதுமட்டுமின்றி அவ்வப்போது மழையும் மிரட்டுகிறது. இந்த நெல் மூட்டைகளை விற்பனை செய்ய இன்னும் எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று தெரியவில்லை.
முறைகேடு
ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் எங்களது நெல்லை கொள்முதல் செய்யாதது ஏன்? என்று எங்களுக்கு தெரியவி்ல்லை. ஆனால் இங்கு மட்டுமின்றி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடக்கிறது.
அதாவது நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளை பல நாட்களாக காத்திருக்க வைப்பதும், இதில் வெறுப்படைந்த விவசாயிகள் அடிமாட்டு விலைக்கு வியாபாரிகளிடம் விற்பனை செய்வதும், வியாபாரிகளிடம் இருந்து அதிகாரிகள் உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்வதும் வாடிக்கையாக நடந்து வருகிறது என்றனர்.
கலெக்டர் அதிர்ச்சி
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கலெக்டர் மோகன், உடனடியாக நுகர்பொருள் வாணிப கழக உயர் அதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கும் நேரில் சென்று உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மேலும் விவசாயிகள் சொல்வதை போல் வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் நடந்துள்ளதா? என விசாரணை நடத்த செஞ்சி தாசில்தார் ராஜனுக்கும் கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் விவசாயிகளிடம் பேசிய கலெக்டர் மோகன், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் முறைகேடு நடந்தால் எனக்கு தகவல் கூறுங்கள். விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story